பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராட்டும். அவர்களுக்கு ஒரு பெரு நிலையை உண்டாக்கும் என்கிறார்.

'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்'

என்று பேசுகிறார்.

இப்படி இதுகாறும் நாம் கூறிய செய்திகளிலிருந்து பார்த்தால், அறிவு நெறியைத் திருவள்ளுவர் உடன்படுகின்றார். ஆனாலும், அன்பு நெறியை மிகுதிப்படுத்துகிறார் என்பதை உணரலாம். இப்படி நாம் கூறுவதற்குச் சான்று அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய முப்பால்களிலும் திருவள்ளுவர் அன்புநெறியை வலியுறுத்துவதைக் காட்டலாம். அறிவு நெறியோ மருந்துபோல் பயன்படுத்தப் பெறுகிறது. இன்னும் சொல்லப் போனால், அன்பு நெறிதான் நூல் முழுதும் வலியுறுத்தப் பெறுகிறது. இவற்றிற்கெல்லாம் மேலாக, காமத்துப்பால் முழுவதுமே அன்பு நெறியை வலியுறுத்துவதற்காகச் செய்யப் பெற்றது போலவே தோன்றுகிறது. இனியவை செய்தல், இன்னா கூறாமை, வெஃகாமை, அழுக்காறாமை முதலிய ஒழுக்கங்களையெல்லாம் தோற்று விக்கின்ற தன்மை அன்பு நெறிக்குத்தான் உண்டே தவிர அறிவு நெறிக்கு அல்ல. அறிவு நெறியை வற்புறுத்துகிற எந்த அதிகாரத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஈதல் அன்பால் விளையக்கூடியது-ஒப்புரவறிதல் அன்பால் விளையக்கூடியது-'ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்றால் அதுவும் அன்பு நெறியை வலியுறுத்துவதுதான்.

'தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்'

என்கிறார் திருவள்ளுவர்.

கற்ற அறிவுடையவர்களாக இருப்பார்களானால், தாம் பெறுகிற இன்ப அனுபவத்தை ஊராரும் உலகத்தாரும் பெறவேண்டும் என்று விரும்ப வேண்டும். அப்போதுதான்