பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

355


பிரிந்து நின்று போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றது இந்தப் போராட்டத்தில் ஆசிரியர் உலகம் தொடர்ந்து தோல்வியைக் கண்டு அனுபவித்து வருகிறது. அது ஒரு பொழுதும் வெற்றி பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பதற்கு மாறான வாழ்க்கையே வீட்டிலும், நாட்டிலும் நாம் காண்கின்றோம் அதனாலன்றோ, 'பள்ளிக் கணக்குப் புள்ளிக்குதவாது' ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்ற பழமொழிகள் தோன்றின. பெற்றோர் சமுதாயம் மனம் வைக்க வேண்டும். நேற்றைய அனுபவத்தின் விளைவாக வரும் அறிவோடியைந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்ளவேண்டும். தம்முடைய குழந்தைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சி செய்ய வேண்டும். நன்றல்லவற்றை ஒதுக்க வேண்டும். நன்றுடையராக இருந்தால் மட்டும் போதாது. தீமையைக் கடிந்து விலக்கு மாற்றலுடையராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நன்றியின் பயனை அனுபவிக்க முடியும். நன்றியின் பயன் விளையும். "நன்றுடையானை...தீயதிலானை" என்பது தமிழ் மறை. இன்றையக் குறை நாளை நிறையாக வேண்டும். இதுவே வாழ்க்கை முறை. குறையே ஒரு பெருங் குற்றமாக முடியாது குறையே ஒரு குற்றமன்று. ஆனால் குறையைக் குறையென்றுணராமல் இருப்பதுதான் குற்றமாகும். இன்று பலரிடம் குறையைக் குறையென்றுணரும் அறிவு இருக்கிறதா என்பதே கேள்வி அந்த அறிவும் ஆற்றலுடன் செயல்படுகிறதா என்று பார்ப்பது அவசியம். எப்படி உலகியல் அரும்பு மலர்ந்து மலராகிறதோ பிஞ்சு காயாகிக் கனியாகிறதோ அதுபோல, மனிதனும் குறைகளைக் கடந்து பூரணத்துவம் பெற்று முழுமனிதனாக வளர்ந்து அதற்குரிய வாழ்க்கை முறைகளைப் பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெறுவதேயாகும். அந்த வாழ்க்கை முறைக்கு விடும் நாடும் துணை செய்யவேண்டும்.