பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆசிரியர்கள் புனிதமான தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள். ஆசிரியத் தொழில் யாழை மீட்டுதலைவிட நுணுக்கமான தொழில். யாழை மீட்டுகிற வழி மீட்டாது போனால் இனிய இசை தோன்றாது. யாழும் கெடும். கேட்பவர்களும் அருவறுப்பர். புறப்பொருளாகி, நம்முடைய பூரண இயக்குதலுக்குக் கட்டுப்பட்ட யாழின் நிலையே இதுவானால், புலப்படாப் பொருளாகவும் நம்முடைய பூரண ஆற்றலுக்குக் கட்டுப்படாததாகவும் உணர்ச்சிகளின் சின்னமாகவும் இருக்கின்ற உயிர்களைத் திருத்தும் வேலை எவ்வளவு சிக்கலானது. சிக்கலானது மட்டுமல்ல, உலகில் எத்தொழிலுக்கும் தேவைப்படுகின்ற ஆற்றலைவிட இதற்கு ஆற்றல் அதிகமாகத் தேவை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒழுங்கின் பெரும் பகுதி, பிறர் வாழ்க்கையிலிருந்து எடுத்துக் கொள்வதேயாகும். ஆசிரியர்கள் தம்முடைய வாழ்க்கை முறையினாலேயே மாணவர்களுக்கு ஒரு பேராசிரியராகத் திகழ வேண்டும். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏற்படும் வேற்றுமை அல்லது பிளவு உடலுக்கும் உயிருக்கும் இடையே தோன்றும் பிளவைப் போன்றது. உடலினின்றும் உயிர் பிரிந்தால் பினமாகும். செயலினின்றும் சொல் பிரிந்தால் சொல் பிணமாகும். அதற்கு ஆற்றல் இல்லை ஆதலால் ஆசிரியர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டும் அடுத்து, மனம் நுண்ணியது, மெல்லியது. பின்னிக் கிடக்கும் முடிச்சுகளைச் சிக்கல் நீக்கிச் சீர்செய்ய எத்துணைப் பொறுமை தேவையோ அதைவிடப் பன்னூறு மடங்குப் பொறுமை தேவை, மனித குலத்தின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, குறை காண்பது எளிது - ஆனாலும், குறைகளுக்குரிய காரணங்களைக் கண்டுபிடிப்பதே அரிய முயற்சி. காரணங்களைக் கண்டு, அக்காரணங்களையே களைந்து குற்றங்கள் தோன்றா வண்ணம் செய்தல் வேண்டும் அதனாலன்றோ திருவள்ளுவர்.