பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

361


அறிந்து பாலூட்டி வளர்க்கும் தாய்போல மழையானது வேண்டின காலத்தே பெய்து, உலகை அளித்துப் பாது காக்கும் முறைமையது என்று மருதக்கலி கூறுகிறது. அருளுணர்ச்சியைப் புலப்படுத்தக் குறிஞ்சிக் கலி ஆசிரியர். "மழையினும் அருள் சிறந்தாய்" என்று கூறுகின்றார். “மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்" என்று இளங்கோவடிகள் இன்புற ஏத்துகின்றார்.

தலைவிக்குத் தண்ணளி செய்யவேண்டிய கடமைப்பாடுடைய தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிய எண்ணங்கொண்டான். தனது எண்ணத்தை எடுத்துக் கூற முயன்ற தோழி மழை வளம் மாறுபடுங்காலத்து உலகம் கெடுவதுபோல, நீ பிரியுங் காலத்துத் தலைவியின் அழகு கெடும் என்று கூறுகிறாள்.

"யாநிற் கூறுவ தெவனுண் டெம்மினு
நீநற் கறிந்தனை நெடுந்தகை வானந்
துளிமாறு பொழுதினில் உலகம் போலுநின்
னளிமாறு பொழுதினில் வாயிழைகவினே"

என்பது கலித்தொகை பிரிவுத் துயரின் எல்லையில் உழலும் தலைவி தனது வருத்தத்தினுடைய மிகுதிக்கு எல்லையாகவும் மழையின்மையைத்தான் குறிப்பிடுகின்றாள். கோடை உலகத்தைச் சுடும்படியாகப் பெய்யாமற் போன மேகம் வருத்துமாறு போலத் தலைவனது கைவிடுஞ் செயல் வருத்துகிறது என்று நெய்தற்கலி ஆசிரியர் நயம் பெறக் காட்டு கின்றார். மழையின்மை துன்பத்துள் துன்பம்; வான்மழை செல்வத்துள் செல்வம்.

இங்ஙனம் உலகை வாழ்விக்கும் மழை தவறாது பொழிய வேண்டுமானால், அதற்காவனவும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இன்று பலர் வான் மழைக்குக் காரணம் கடலும், கதிரவனும், குளிர்ந்த காற்றும் என்றேகு.XV.24.