பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இல்லாமல் இருந்தால்கூடக் குறையில்லை. நிறைய கல்விச் சாதனங்கள், கற்பிக்கும் கருவிகள் வழங்கப் பெறுதல் வேண்டும். குழந்தைகள் தங்கள் சக்திகள் அனைத்தையும் உபயோகிக்கும் தகுதியுடையவர்களாகச் செய்யும் கல்வி வழங்கப் பெறவேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில் உச்சரிப்பு கற்கும் பாங்கு, நூல்களைப் படிக்கும் முறை. அறிவைத் தேடும் பழக்கம், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளல், சிந்தித்தல், கையெழுத்துப் பழகுதல் முதலிய பயிற்சிகள் முழுமை பெறுதல் வேண்டும். இதற்கேற்ற பருவம் மழலைப் பருவமே!

எத்தகைய கல்வி வேண்டும்?

நாம் எத்தகைய கல்வியை வழங்கவேண்டும்? கல்வியென்பது தெரியாததைத் தெரியச் செய்வது மட்டுமன்று; கற்றலுடன் வாழ்ந்திடவும், ஒழுக்கத்தில் நின்று ஒழுகச் செய்திடவுமாகும். கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டும் அமைந்துவிடக்கூடாது. செய்ம்முறைக் கல்வியும் அவசியம். உழைப்புக் கல்வியும் கூடத் தேவை. ஆதலால் குழந்தைப் பருவத்திலேயே உழைப்புப் பாடங்களில் தன் செயல்களை முன்கூட்டியே திட்டமிடும் திறமையையும் அதற்கான கருவிகளைத் தேர்ந்தெடுப்பதையும் கற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

சாதாரணமாகச் சிலர் நம்புகின்றனர். நல்ல காரியங்களைச் செய்வதே பெருமை என்று! அப்படியன்று! நல்ல காரியங்களையும்கூட அச்சத்தின் காரணமாகவும், பரிசு-புகழ் முதலியன பெறக் கருதியும் செய்யலாம். ஆதலால், நல்ல காரியங்கள் செய்வது மட்டும் பெரிதன்று. நல்ல காரியங்களைச் செய்வதில் உண்மையான ஆர்வம் இருக்க வேண்டும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்கக்கூடாது. "வீடும் வேண்டா விறல்” இதற்குப் பொருந்தும். நல்லது, நல்லதுக்காகவே! வேறு எதற்கும் அல்ல என்ற கடைப்பிடிப்பே தேவை.