பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

371


"சிறைகாக்கும் காப்பு எவன்செயும் மாதர்தம் நிறைகாக்கும் காப்பே தலை"

என்ற வள்ளுவனின் வாக்கை மனத்திற் கொண்டு சீதையை நிறையுடையவளாகக் காட்டுகிறான் கம்பன்.

இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான். இராவணனின் ஆடம்பர வாழ்க்கை அவனது சீரும் செல்வாக்கும் ஆண்மகனையே மயக்கிவிடும் என்றால் மகளிரைச் சும்மாவிடுமா? சிறிதேனும் மனம் திரிந்தாளா? இல்லை. இராவணனின் எந்தச் சர்வாதிகார ஆட்சியும்கூட அவளைத் தொடமுடியவில்லையே.

இனி சீதையின் நிலை என்ன? தன் கணவனை - தன் சுற்றத்தை - உற்றார் உறவினரை அத்தனை பேரையும் பிரிந்திருக்கிறாள். அப்படிப் பிரிந்து இருக்கும் நேரத்திலும் கூட இராமனைப் பற்றியே சிந்தனை செய்கிறாள். விருந்து வந்தால் அவன் எப்படி விருந்துபசாரம் செய்யப் போகிறான் என்றெல்லாம் என்னென்னவோ சிந்தித்துக் கவலைப்படுகிறாள். அரக்கர் மத்தியில் அவள் இருக்கிறாள். இராமனின் தூதுவனான அனுமன் வருகிறான். அவள் தனது தோள்மீது ஏறிக்கொண்டால், தான் அவளை இராமனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுவதாகக் கூறுகிறான். அவள் சரி என்றால் இராமனை அடைந்துவிடலாம்; சரி என்றாளா? இல்லை. அவ்வாறு இராவணனின் காவலிலிருந்து தான் தப்பி ஓடினால், இராமனின் வில்லுக்கு - வீரத்திற்கு இழுக்கு நேரிடுமே என்று கூறி மறுத்துவிட்டாள். எவ்வளவு அருமையான ஒரு குடும்பத் தலைவியாக விளங்குகிறாள்? இத்தகு கம்பன் வேண்டாமா?

இன்று உலகம் முழுதுமே குடியாட்சிக் கருத்துப் பரவியிருக்கிறது - பரவி வருகிறது. இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன்பு குடியாட்சி மலராத காலத்தில் கம்பன் குடியாட்சிக்குக் கால்கோள் செய்திருக்கிறான். "மன்னன்