பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

373


அன்று போர்முனையில் ஓர் ஒழுங்கு - நியதி இருந்திருக்கிறது. போர்க்களத்திலே இராவணன் நிராயுதபாணியாக நின்றுகொண்டிருக்கிறான். நிராயுதபாணியாக நிற்கும் இராவணனைப் பார்த்து இராமன், “இன்று போய் நாளைவா” என்கிறான். இன்றையப் போரில் ஓர் ஒழுங்கு இருக்கிறதா? நேரம் இருக்கிறதா? இலக்கு இருக்கிறதா? இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன்பு இவ்வளவு அருமையான போர்முறை ஒழுக்க நெறி பேசிய கம்பன் நமக்கு வேண்டாமா?

இலக்கியம் காலத்தின் கண்ணாடி - சமுதாயம் நின்று நிலைபெறுவதற்கான தேவையான கருத்துக்களைத் தருவது. அத்தகு இலக்கியங்கள் எல்லாக் காலத்திற்கும் எல்லாக் கருத்தினருக்கும் ஏற்றனவாகப் பெரும்பாலும் விளங்கும். காலமாறுபாட்டால் கருத்து வளர்ச்சியால் ஒரு சில ஒத்துவராமலும் இருக்கலாம். இலக்கியத்தை நாம் ஆராயும்போது அந்த இலக்கியம் தோன்றிய காலம், அந்தக் காலச் சமுதாயத்தின் வாழ்க்கை முறை முதலியவற்றை நாம் மனத்திற் கொண்டே ஆராய வேண்டும். இலக்கியத்தில் நாம் கொள்ளத் தக்கனவும் இருக்கும்; ஒதுக்கித் தள்ளத் தக்கனவும் இருக்கும்; எனவே, ஓர் இலக்கியத்தைப் படித்தால், அடிமாறாமல் அப்படியே சென்றுவிடுவோம் என்று கருதுவது நிறைவுடையதாகாது. செருப்பு நமக்காகத்தான் இருக்கிறது. அதற்காகச் செருப்பு இழுத்துச் செல்லும் வழிக்கே நாம் போய்விடுகிறோமா? அதுபோல நமக்காக - நம் வாழ்வுக்காக உள்ள இலக்கியங்களைப் படித்து, கொள்ளத்தக்க கொள்கைகளை நாம் கடைப் பிடிப்பதே சரியானது.

கம்பன் சமுதாய ரீதியிலும், ஆட்சித் துறையிலும், குடும்ப வாழ்க்கையிலும் மட்டுமல்ல, அறிவியல் துறையிலும் கூட மிகச்சிறந்த கருத்துக் கொண்டு விளங்கினான். அத்தகு புரட்சிக் கவிஞனை, புதுமைக் கவிஞனை, புத்துலகச் சிற்பியை வேண்டாம் என்று கூறமுடியுமா? வேண்டாம்