பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றால் இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகளுக்குமுன் நாம் வாழ்ந்த சிறந்த வாழ்க்கைச் சுவட்டை அழிக்க முற்படுகிறோம் என்றுதான் பொருள். கம்பன் வேண்டாமா?

17. இயல்வது கரவேல்

ஈதலும் இசைபட வாழ்தலும் தமிழினத்தின் தனிப் பண்பு. "செல்வத்தின் பயனே ஈதல்” என்பது தமிழினத்தின் இதய கீதம். மாரிபோல் வாரி வழங்குதலே தமிழினத்தின் தலையாய செயல். "இயல்வது கரரேல்" எனும் பழமொழி தமிழ் நாட்டில் யாவரும் அறிந்த பொதுமொழி. "இயல்வது" என்ற சொல்லின் பொருளாழத்தை ஏடுகள் காட்ட முடியுமா? முடியாது. தமிழினத்தின் வரலாறுதான் காட்ட முடியும்.

தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி, "இயல்வது கரவேல்” என்ற பழமொழிக்கு விளக்க உரை தருகின்றாள். பிரிவால் வருந்துகின்றாள் தலைவி. அன்புடைத் தோழி ஆறுதலுரைகள் பல பகர்ந்து தேற்றுகின்றாள். 'தலைவர் பொய்யா நாவினர் - அருளொழுக்கம் பூண்டவர். ஆதலால் நினக்கு அருள் செய விரைவில் திரும்பி வருவார்' என்று சொல்லுகின்றாள். தோழிக்குத் தலைவி எடுத்தோதுகின்றாள். "ஈ என்று இரந்து நிற்கும் இரவலர்க்கு, தம்மால் இயல்வதைச் செய்யாது கரத்தால் மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலின் நம்முடைய காதலர் காதலித்தது பொருளேயாம்” என்று கூறுகின்றாள். அதாவது இரக்கப்படுவோரிடத்துப் பொருளில்லா திருக்கலாம். ஆனால் பொருளை முயன்று தேடும் வலிவுடைமையைப் பெற்றிருக்கலாம். அங்ஙனம் வலிவிருந்தும் இரவலர்க்குப் பொருள் இல்லை என்னின் அதுவும் இயைவது கரத்தலேயாம் என்பது தமிழர் கோட்பாடு.