பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

375


"இல்லோர்க் கில்லென்றியைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிய நம்மிலும்
பொருளே காதலர் காதல்"

என்பது தலைவியின் வாய்மொழி.

ஈத்துவக்கும் இன்பம் இணையற்ற இன்பம். இத்தகு இன்பத்தைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ள ஒவ்வொரு வரும் விரும்புவர்.

பிறந்திருப்பவர் அனைவரும் பயனுடையரல்லர். வள்ளுவனாரும்கூட "மக்கட்பதடி” என்று கூறி ஒதுக்குகின்றார் ஒரு சிலரை கூற்றுவன் கொள மாளுதல் பயனற்றது. அங்ஙனம் மரிக்கின்றவர்கள் தவப்பேறு உடையவர்களல்லர். பிறருக்கெல்லாம் பெட்புற உதவ, சேட்புலம் படர்ந்து பொருளிட்டுதல் வேண்டும். அதுவே பயனுடையது; புகழுமாம்.

"நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் தாள்வளம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்.”

என்பன மாமூலனாரின் மணிமொழிகள்.

இங்ஙனம் வாழ்ந்தாரும் மரித்தாரும் தமிழகத்தில் பலருண்டு. இறந்த பிறகும் புதைகுழியினின்றும் வெளிப் போந்து ஈந்தாரும் உண்டு. செத்தும் கொடுத்த சீதக்காதியை அறியாதார் யார்? மாரியைப்போல் வாரி வழங்கிய பாரியை அறியாதார் யார்? பாரிமன்னன் படைமடம் பட்டானில்லை. ஆனால் கொடைமடம் பட்டதுண்டு. அவனுடைய ஆட்சியில் முந்நூறு ஊர்கள் இணைக்கப்பட்டு, குன்றாவளத் தனவாய் உழைப்பின்றே கிடைக்கும். இயற்கை உணவுப் பொருள் மிகுதியும் வாய்ந்த மலைகள் பாரியின் பறம்பு நாட்டில் உண்டு. பாரியின் கைவண்ணம் சொல்லுந்தரமன்று. முல்லைக் கொடியின் துன்பத்தையும் தனது துன்ப