பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராட்டுகிறது. தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் துன்பத்தினின்று பாதுகாக்கும் கருவியே அறிவு என்று திருக்குறள் கூறுகிறது.

"அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”

என்பது திருக்குறள்.

இன்று வாழும் நம்முடைய சூழலில் கல்வி கற்றவர்கள் ஏராளமானோர். ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மை வருத்தும் வறுமை அகன்றபாடில்லை! சாதிப் புன்மைகள் அகன்றபாடில்லை! ஏன் இந்த அவலம்? அறியாமையை அகற்றவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி பயன்படவில்லை. வாழ்தலுக்குக் கல்வி துணை செய்யவில்லை. கற்ற நூற் கருத்தின்வழி மனிதன், குற்றங்களினின்றும் விடுதலை பெறவேண்டும். கற்ற நூற்கருத்தை வாழ்க்கையில் சோதனைப்படுத்தவேண்டும். அவ்வழி அறிவு பெறுதல் வேண்டும். எதிர்மறைச் சிந்தனைப் போக்கில், தீமையைச் சிந்தனை செய்யும் போக்கில் கல்வி அமையக்கூடாது. மானுடத்தில் வெற்றிக்கும் நல்வாழ்க்கைக்கும் எதிர்மறைச் சிந்தனைப் போக்கு, இம்மியும் உதவி செய்யாது. இன்றைய கல்விமுறை எதிர்மறுப்புடையதாக அமைந்துள்ளது. இதனால், இளைஞன் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் இழக்கிறான். கற்பிக்கும் முறையில்கூட மாணவனை எதிர்மறையில் அணுகக்கூடாது. ஓர் இயந்திரம் ஓடவில்லையென்றால் அந்த இயந்திரத்தை அடித்துப் பயன் என்ன? அந்த இயந்திரத்தில் இருக்கும் பழுதைக் கண்டுபிடிக்கும் வகையில் சிந்தித்து முயற்சிசெய்ய வேண்டியிருக்கிறது. இதுவே சரியான கல்வி போதனையாகும்.

தாய்மொழிக் கல்வி

இன்றைய கல்வி முறையில் அதுவும் கிராமப்புறத்தில் தாய்மொழிக் கல்வி தரமானதாக இல்லை. நகர்புறத்தில் ஆங்கில மொழிவழிக் கல்வியே பரவலாக நடைமுறையில்