பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

399


இயேசு, முகம்மதுநபி, காந்தியடிகள் ஒவ்வொரு காலத்தில் தோன்றி வெற்றி பெற்றார்கள் என்று பேசுகிறோம்; ஆனால், அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் வெற்றி பெற்றார்களா என்ற கேள்விக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? புத்தரை வாதில் வென்ற வரலாற்றை நமது சைவ இலக்கியத்தில் படித்துப் பரவசமுற்றுப் பாராட்டுகிறோமே தவிர, இன்றைய நடைமுறையில் - நாட்டில் "பெளத்தம்" - மக்கட் சமுதாயத்தை வென்றிருக்கிறது. மேதினியில் பல் வேறிடங்களுக்கும் சென்று பரவியிருக்கிறது என்ற உண்மையினைச் சைவ அன்பர்கள் அறிந்துகொள்ள மறுக்கிறார்கள்!

இலக்கியம் வேறு, சமயம் வேறு என்ற கொள்கையை நாம் ஒத்துக்கொள்ள முடியாது. தொல்காப்பியர் காலத்திலிருந்து, பாரதியார் காலம் வரையிலே குணரீதியான தத்துவ வழிபட்ட சமயம் ஒத்துக் கொள்ளப் பட்டுத்தான் வந்திருக்கிறது.

எண்ணத்தையும் சிந்தனையையும் ஒழுங்குபடுத்தி, அவற்றைச் சுவையூட்டத்தக்க வகையில் சொல்லுவது தான் இலக்கிய மரபு. சமுதாயத்தில் கருத்துப் புரட்சியை ஏற்படுத்திச் சிந்தனையைத் துரண்டிவிடுவதுதான் இலக்கியத்தின் விழுமிய பயன்.

நாம் இன்று "சமயம்” என்று கருதிக் கொண்டிருக்கிற பலவற்றில் (Form) உருவ அமைப்பு இருக்கிறதே தவிர உயிரோட்டம் இல்லை. எனவேதான் இன்றையச் சமயம், நீரில்லாத ஆறுபோல மணமில்லாத மலர் போலத் தோற்றம் அளிக்கிறது.

வாழ்க்கையின் தேவை வேறு; இலட்சியம் வேறு.இந்த வாழ்க்கையில் இன்பம் பெறப் பொருள் தேவை. அதற்காக பொருளே வாழ்க்கையின் இலட்சியம் என்று கருதிவிடலாமா? அதுபோல, சமய அனுபவம் நமது வாழ்க்கையின் இலட்சியமாக வேண்டும்; அந்த இலட்சியத்தைப் பெறப் பூவும்,