பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

403


போதும்கூட அது தனி மனிதனை வந்து சாரத்தான் செய்கிறது. சமுதாய உரிமை முதன்மைப்படுத்தப்படும்போது, தனிமனித உரிமையை மறுப்பதாகக் கொள்ளக்கூடாது. சமுதாயப் பிரிவிலே தனி மனித உரிமை நசுக்கப்பட வேண்டும் - பொசுக்கப்பட வேண்டும் - ஒடுக்கப்பட வேண்டுமென்று சொல்கிறார்கள். அப்படித் தனிமனித உரிமை நசுக்கப்பட்டு பொசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு விட்டால் அவர்களெல்லாம் மிருகக்காட்சிக் கூண்டிலே போய் வாழ்வதா? தனிமனித உரிமை நசுக்கப் படுவதோ - பொசுக்கப்படுவதோ - ஒடுக்கப்படுவதோ நமது இலட்சியமல்ல. தனிமனித உரிமை சமுதாயத்திற்குக் கேடு தரும் என்ற ஓர் எண்ணம் வருகிறபோது, தனிமனித உரிமையை ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்துவதுதானே தவிர தனிமனித உரிமையை நசுக்குவதும் பொசுக்குவதும் ஒடுக்குவதும் அல்ல சமுதாயத்தின் இயல்பு. எனவே சுதந்திர நாட்டில் முதன்மைபடுத்தக் கூடியது தனி மனித உரிமையா, சமுதாய உரிமையா? இந்தக் கேள்வியே எப்பொழுது எழும் என்று கருதுகிறீர்கள்? ஓர் எடுத்துக் காட்டுக் கூறினால் நன்றாகப் புரியும்.

ஒரு மிராசுதார் இருக்கிறார். அவருக்கு உள்ளூரிலே இருபத்தைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. மற்ற ஊர்களிலும் அவருக்கு நிலபுலன்கள் உண்டு. உள்ளூரிலே அவர் மாடு கன்றுகள் வைத்திருக்கிறார். தமது 25 ஏக்கர் நிலத்தில் சொந்தப்பண்ணை வைத்தால் அவருக்கு நிறைய வைக்கோல் கிடைக்கும் எனவே அவர் அந்த 25 ஏக்கர் நிலத்தில் சொந்தப் பண்ணை வைக்க விரும்புகிறார். அவரைச் சார்ந்தோரும் அதையேதான் சொல்லுகிறார்கள். அதே நேரத்தில் நிலமில்லாத விவசாயிகள் பலர் ஊரிலே இருக்கிறார்கள்.

மிராசுதாருக்குத் தேவை வைக்கோல். அவருக்கு வேண்டிய நெல் மற்ற இடங்களிலிருந்து வந்துவிடுகிறது. மிராசுதாருக்கு மாடு கன்றுகளுக்கு வேண்டிய வைக்கோல்