பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

410

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மரபியல் பொருந்தும். செயல் முறைகளிலும், வாழ்க்கை முறையிலும் மாறுபாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. தேவையானதும் கூட.

மாறுதலும் முன்னேறுதலும் சமுதாயத்தின் உயிர்ப் பண்பு. இவ்வுயிர்ப்பண்பை இழந்த சமுதாயம் வளராது வாழாது ஓட்டம் தடைப்பட்டு நின்ற குட்டை போல் தேங்கிக் கெட்டுவிடும். எழுத்தாளனின் மிக முக்கியப் பொறுப்பு இந்த மாறுதல் உணர்வையும் முன்னேற்ற உணர்ச்சியையும் மக்கட்குத் தருவது.

மனித சமுதாயத்தில் குறுகிய இனமொழி நிலப் பற்றுக்கள் ஆட்சி செய்வதைப் பார்க்கிறோம். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு இந்தக் குறுகிய உணர்வுகள் பெரும் முட்டுக்கட்டை. மேலும், அன்புக்குப் பதில் பகையை வளர்த்து உறவைக் கெடுத்து மனித சமுதாயத்தை அழித்து விடக் கூடியனவுமாகும். இந்த உணர்வுகளினின்றும் மனித சமுதாயத்தை விடுதலை செய்வது எழுத்தாளரின் தலையாய கடமை. தமிழ் எழுத்துலகில் சங்ககாலம் தொட்டு, இந்த உணர்வுகளை எதிர்த்துக் கருத்துக்கள் வற்புறுத்தப் பெற்று வந்திருந்தும் கூட அந்த ஒருமைப்பாட்டுணர்வு மனித சமுதாயத்தில் பூரணமாக இடம் பெறவில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளீர்" "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஆகிய கருத்துக்களடங்கிய எழுத்துக்களுக்கு விரிவுரைகளும், விளக்க உரைகளும் நாட்டிலே நடமாடினவே தவிர வாழ்க்கை முறைக்கு வரவில்லை. நாகரிகத்தின் சிறப்பு தூய்மை என்றெல்லாம் காரணம் காட்டப்பெற்றாலும் கூட அதன் பின்னணி ஆதிக்க உணர்ச்சியேயாகும். மனித சமுதாயத்தின் வரலாற்றில் பெரும் பகுதியை ஒரு சில மனிதர்களின் ஆதிக்க உணர்ச்சியே போர் மயமாக்கி விட்டதைப் பார்க்கிறோம். இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு. இல்லை. அப்படிச் சொல்லுவது கூட சரியில்லை. விஞ்ஞானம்