பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

411


என்பது வாழ்க்கையை வளர்த்து மனித சமுதாயத்தை மேனிலைக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்துவதேயாகும். ஆனால் இன்று அது திசை தவறி மக்களைக் கொன்று குவிக்கும் குண்டுகளைக் குவிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆதலால், மனித சமுதாயத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சி சென்ற நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டுக்கு இன்றியமையாத் தேவையாகும். குறிப்பாக பாரத நாடு பல்வேறு மொழி பேசும் மக்களும், மதச்சார்புடைய மக்களும் வாழும் நாடு. இங்கு முளைத்த குறுகிய பிரிவினை யுணர்வுகளினாலேயே இந்த நாடு அடிமைப்பட்டது. நமது நாட்டின் சுதந்திரம் நமக்கு உயிரினும் இனியது. சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு உணர்வினாற் சிறந்த ஒருமைப்பாடு இந்த நாட்டு மக்கட்குத் தேவை. குறுகிய பற்றுக்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிப் பாயும் தண்ணீர்போல, குறுகிய பற்றுக்களைக் கடந்து, வாழ்வது பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணிரை ஏற்றுவதுபோல. மேட்டிலிருந்து பள்ளத்திற்கு யாரும் தண்ணீரை இறைப்பதில்லை. பள்ளத்திலிருந்து மேட்டிற்கு இறைப்பதே மரபு. இதற்கே முயற்சி என்று பெயர். இன்றும் சிலர் ஒருமைப்பாட்டுணர்வுக்கு விரோதமாக குறிகியபற்றின் வழி மனிதர்களை அழைத்துச் செல்ல எழுதுகிறார்கள். அது இலட்சியம் தவறிய எழுத்து. இன்றைய இந்தியத் தமிழ் எழுத்தாளர் கடமை இந்த நாட்டு மக்களிடையே உளங்கலந்த உணர்வினாலாய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க உதவும்படி எழுதுவதேயாகும்.

மனிதர்கள் எல்லோரும் இன்புற்று வாழவே இவ்வையகம். சிலர் வாழ்வதும் பலர் வாழ்விழந்து அல்லற்படுவதும் நீதியுமாகாது; நியாயமுமாகாது; ஒழுக்கமுமாகாது. நீதி என்ற சொல் சமய இயலோடு தொடர்புடையது. நியாயம் என்ற சொல் அரசியலோடு தொடர்புடையது. ஒழுக்கம் என்ற சொல் சமுதாய இயலோடு தொடர்புடையது. இவ்வாறு முத்துறையிலும் ஏற்றுக் கொள்ளப்