பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விடும். ஆத்திக நாத்திகச் சண்டைகள் செய் முறைகள் சடங்குகளைப் பற்றியனவாக இருந்து, மாறுதலையும் வளர்ச்சியையும் தரும் வகையில் இருக்கலாமே தவிர அடிப்படைச் சமய உணர்வையே பாதிப்பதாக இருக்கக் கூடாது. சமய வாழ்வு தூய்மையான ஓர் இலட்சியக் கோடு. அந்த இலட்சியக் கோட்டை நாம் அழித்து விடுவதினால் மனித சமுதாயத்தையே இலட்சிய நோக்கில்லாததாக்கி விடுகிறோம் என்பதை. நாம் மறந்துவிடக்கூடாது. அப்பரடிகள் இத்தகு தூய இலட்சியக் கோட்டையே சமய நெறியெனக் காட்டினார். அந்நெறியே காந்தியடிகள் நின்று வாழ்ந்த வாழ்க்கை, தமிழ்த் தந்தை திரு.வி.க. போற்றிய நெறியும் அதுவே. ஆதலால், பண்பட்ட வாழ்க்கையோடியைந்த சமயப் பண்பை வளர்க்கும் வகையில் எழுத்துக்கள் வளர வேண்டும்

25.ஒருமைப்பாடு

பாரத இந்தியாவின் பண்டைய வரலாறு மற்ற எதனையும்விட இந்திய ஒற்றுமைதான் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவாகப் போதிக்கிறது. இந்தியத் தேசிய ஒற்றுமையில்தான் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் பிரகாசமான எதிர்காலம் திகழவிருக்கிறது.

எந்தச் சாதியாக இருந்தாலும் சரி; எப்படிப்பட்ட இனத்தினராக இருந்தாலும் சரி அல்லது சமயத்தவராக இருந்தாலும் சரி இந்தியாவைப் பிளவுபடுத்தும் எந்த நோக்கத்தையும் நாம் அனுமதிக்க முடியாது. இந்திய ஒற்றுமையே இந்தியர் மதிக்க ஒவ்வொருவரின் முதன்மையான குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் கற்பித்தாக வேண்டும்.

மொழி இன அடிப்படையில் இந்தியாவிலிருந்து தனித்துப் பிரிந்து போகவேண்டும் என்கிற கொள்கை மக்கள்