பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களைக் காட்டிலும் அதிக ஆற்றலையும் வளப்பத்தையும் பெற்று பிரதேச மொழிகளை இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துமோ என்ற பீதியும் தமிழ் மக்களிடை நிலவிக் கொண்டிருக்கிறது. மொழி ஆதிக்கத்தின் காரணமாக அரசியல் நிலையிலும் பொருளாதார நிலையிலும் இழப்புகளை ஏற்க வேண்டிய நிலை நேருமோ என்ற அச்ச உணர்வு தமிழரிடத்தில் பரவிக் கிடக்கிறது.

ஆனால், மேற்கண்ட அச்சத்திற்கும் பீதிக்கும் எந்தவித இடமும் இல்லை; வாய்ப்பும் கிடையாது. காரணம், நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனிப்பட்டவர் வளர்ச்சிக்கும் எல்லா இனத்திற்கும் நல்ல முழுமையான பாதுகாப்பளித்திருக்கிறது.

மாநில அளவில் பிரதேச மொழியான தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் கல்வித்துறையில் தமிழைப் பயிற்சி மொழியாக்கவும் அரசினர் கொள்கை வகுத்து நடைமுறைப்படுத்துவதாக இருந்தபோதிலும் இந்த வகையில் பலபடப் பாராட்டும் விதத்தில் முன்னேற்றமோ தேர்ச்சியோ இல்லை என்றே கூறலாம். இந்தியாவில் பேசப்படும் இந்தி தவிர்த்த மற்ற பிரதேச மொழிகள் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன; நல்ல முறையில் வளர்ந்து செழித்தோங்கி இருக்கின்றன என்ற கருத்தை வேறுபட்ட மொழி பேசும் இனத்தவரின் உள்ளத்தில் பதியவைத்து, நம்பிக்கை ஊட்ட வேண்டியது நமது முதல் கடமையாக இருத்தல் வேண்டும். இதில் நாம் வெற்றி காண்போமானால், மொழியின் பெயரால் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை எதிர்க்கும் தீய சக்தியை முறியடித்துவிட முடியும்.

இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியைத் தடுத்து முறியடிக்க கீழ்க்கண்ட நடைமுறை வேலைகளில் ஈடுபடலாம் என சில ஆலோசனைகளைத் தெரிவிக்கிறோம்.