பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

423


அனைத்திந்தியாவின் எல்லாக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் முக்கிய பாடமாகத் திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருமைப்படுத்தக் கூடிய கருத்தையும் நல்ல குணாதிசயங்களையும் எதிர்கால இளஞ் சந்ததியினரின் சிந்தனையில் ஏற்பட இந்த ஏற்பாடு வழிவகுக்கக் கூடும்.

26. வாணிபமும் ஆன்மீகமும்

நான் கருத்து வியாபாம் செய்யும் ஒரு வாணிகன்; எனது வணிகத்திற்கு மேடைகளே சந்தைகள்.

இன்று, நிலப்பிரபுத்துவத்திற்குச் சாவுமணி அடித்தாகிவிட்டது; பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவனை விடச் சில வெண் பொற்காசுகளை வைத்து வாணிபம் செய்கிறவர்களுக்குத்தான் இன்று சிறப்பு இருக்கிறது. எந்த ஒரு துறையிலும் மனிதன் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ளும் அளவிற்குச் செழிப்பும், செழுமையும் பெறுதல் வேண்டும்.

ஆன்மீகம், எங்கோ ஓர் உலகத்திற்குப் போக டிக்கட் வாங்குகிற "புக்கிங் ஆபிஸ்" அல்ல; மத உலகம் இன்று வாணிகமாகிவிட்டது. அந்த வாணிகத்திற்கு விற்பனை வரி இல்லை; வருமான வரியுமில்லை.

ஆன்மீகத்தின் அடிப்படை எண்ணம் தன்னை அறிதலாகும். ஆன்மாவைப்பற்றி அறிதல் ஆன்மீகம், அதாவது உயிரியலைப் பற்றிய அறிவு.

நான் யார்? என் உள்ளம் யார்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் மனிதனாக வாழ்கிறோமா, மாடாக வாழ்கிறோமா? சிங்கம் புலி கரடியாக வாழ்கிறோமா என்பதை அறிதல் வேண்டும். மனிதன் தன் குறைகளை அறிதல் இன்றியமையாததாகும்; குறைகளை அறிந்து கொள்ளுதல் திருந்துவதற்கு உதவியாக இருக்கும்.