பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடலை மூளையைப் பழக்கப்படுத்திக் கொள்வது போல நமது மனத்தையும் நாம் நல்ல முறையில் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். புரியாத புதிராக இருக்கின்ற மனிதனைப் பக்குவப்படுத்தி அவனை நிறைவுடையனாக்குவன மதம், கடவுள் நம்பிக்கை முதலியன. நாம் பல்வேறு வகையான உணவுகளையும் சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் ஊறுகாயைச் சாப்பிட்டால், நாம் சாப்பிட்ட எல்லாம் சீரணித்து, அந்த ஊறுகாயின் மணம் மட்டும் மேலெழுந்து நிற்பதுபோல, மதமும் கடவுள் நம்பிக்கையும் நம்மிடமுள்ள வஞ்சம், பொய், களவு, சூது, சினம் முதலியனவற்றையெல்லாம் சீரணிக்கச் செய்து அன்பையும், சகோதரத்துவத்தையும் மேலோங்கி நிற்கச் செய்யும்.

ஒரு நாடு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவது அந்நாட்டின் ஆன்மீகத்துறை வளர்ச்சியைப் பொறுத்து தான். ஒரு நாடு ஒழுக்கக் கேடடைந்துள்ளது என்பதற்கான அறிகுறி சட்டப் புத்தகங்களின் குவியல்தான்!

'சட்டம் ஒரு வலை;' பெரிய வண்டுகள் அதில் மாட்டிக் கொள்வதில்லை; துளைத்துக்கொண்டு வெளி வந்துவிடுகின்றன. அப்படி வலையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறுகிறவர்கள் தாங்கள் வெளியேறுவது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகப் பத்து சிறியவர்கள் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணுவதுண்டு.

பொதுவாகக் கலப்படம் செய்வது என்பது குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம். ஆனால், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக கலப்படம் பண்ண எண்ணுவதைக் குற்றமாகக் கருதுவதில்லை. சட்டங்கள் முழு நிறைவுடையனவாகத் தோன்றிவிடுவதில்லை. முழங்காலில் ஒரு புண் ஏற்பட்டால் அதன் மீது கட்டுப் போடுகிறோமே, அதுபோல்தான் சட்டத்தில் திருத்தங்கள் சேர்த்துக் கொள்வதும்.