பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிறப்பு கூறப்பெறும் போது, வணிகச் சிறப்புப் பேசப்பெறுகிறது. பொருள் ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றப்படும் போது ஓரிடத்தில் அதிகமாகச் சுரண்டப்படக் கூடாது.

காய்தலும் உவத்தலும் இன்றிப் பேசும் பண்பியல்பு அன்றிருந்தது. இன்று, யார் எதைப் பேசுவது என்ற வரையறை கூட இல்லாமல் யாரும் எதையும் பேசுகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

வணிகர்கள் பெரும் பொறுப்புடையவர்களாக இருத்தல் வேண்டும். கலப்பில்லாத நல்ல பண்டங்களையே வழங்குவதன் மூலம் மக்களின் உடலையும் உயிரையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக வணிகர்கள் விளங்கமுடியும். ஒழுக்கம் அன்பு இவற்றைக்கூட வணிகக் கடைகளில் கற்றுக் கொள்ளலாம். முகத்தால் அமர்ந்தினிது நோக்கும் பண்பு இன்று கடைகளில் தானிருக்கிறது ஆத்மார்த்தீக உலகத்திற்கும் வணிக உலகத்திற்கும் உறவு ஏற்பட்டால் அன்பும் பண்பும் ஒழுக்கமும், நாணயமும் செழித்தோங்கி வளரும்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கையைவிட வணிகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகி இருக்கிறது. அது நல்லதல்ல - வணிகர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். இது சம்பந்தமாக வணிக சங்கங்களே திட்டமிட்டு ஒரு நல்ல ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

நாட்டில் ஒழுக்கத்தைப்பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். ஆனால் சிறிதளவுகூட வாழ்க்கையில் கடைப் பிடிக்கமாட்டார்கள். தனிமனித ஒழுக்கத்தைப் பெரிது படுத்திச் சமுதாய ஒழுக்கத்தை அலட்சியப்படுத்துவதால் "சமுதாய ஒழுக்கம்" சீர்குலைகிறது. சமுதாய நெறி தழுவிய வாழ்க்கை மலர வேண்டும்.