பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற்றாலும் தொட்டியின் அளவுக்குத்தான் நீந்திச் சுற்றும்; தன்னுடைய நீந்தி வாழும் பரப்பளவை விரிவு செய்து கொள்ளாது. இன்றைய மனிதர்களும் சாதி, மதம், கட்சி என்ற எல்லைகளைக் கடந்து ஊர், நாடு, உலகம் என்றோ சமூகம், சமுதாயம், மானுடம் என்றோ தன்னுடைய இதயத்தை விரிவுபடுத்திக் கொள்ள மறுக்கின்றனர். இந்தத் தீமை கல்வி உலகத்திலிருந்து முற்றாக நீக்கப்படவேண்டும். வளரும் தலைமுறையினர்-மாணவர்கள் சமூகக் கல்வி பெற்றாக வேண்டும். மாணவர்கள் சமூகத்தின்-மானுடத்தின் ஓருறுப்பாகத் தங்களை நினைத்துக்கொள்ளவேண்டும். பாரதிதாசன் வார்த்தையில் சொன்னால் மானிட சமுத்திரத்தில் சங்கமமாகவேண்டும்.

"அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைத்துகொள்! உன்னை சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!”

என்பது பாரதிதாசன் கவிதை வரிகள்.

வரலாற்றுக் கல்வியில் மாறுதல் வேண்டும்

இன்று கல்வி கற்கும் பல்வேறு படிகளிலும் "வரலாறு” கற்பிக்கப்படுகிறது என்பது உண்மை. ஆனால் வரலாறு எப்படிக் கற்றுக் கொடுக்கப்படவேண்டுமோ அப்படிக் கற்றுக் கொடுக்கப்படவில்லை. சுரண்டல் பொருளாதாரச் சமுதாய அமைப்பு, பிற்போக்குத்தனம் ஆகியன வரலாற்றை உள்ளவாறு கற்க முடியாமல் தடை செய்கின்றன.

வரலாறு என்பது அரசர்களைப் பற்றியனவும், போர்களைப் பற்றியனவும் மட்டுமன்று. அரசர்களைச் சுற்றி மட்டும் எழுதுவது எப்படி வரலாறு ஆகமுடியும்? மக்களின் சிந்தனைப் போக்கையும், மக்களின் வாழ்க்கைப் போக்கையும் கூர்ந்து நோக்கி எழுதப்படுவதுதான் வரலாறு. சான்றாக இந்தியாவில் மொகலாய ஆட்சி அமைத்த