பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

437


உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகத் திட்டமிடும் தங்கள் பணிகளை வரவேற்பதில், தங்களோடு ஒத்துழைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

பழங்காலத்தில் தமிழ்நாடு இன்றைய கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியன அடங்கிய நிலப் பகுதியாகும். ஆதலால் தண்ணிர்ப் பிரச்சினை இல்லை. இன்றோ மொழிக் கலப்பால் மொழி பிரிந்து, இனம் பிரிந்து, நிலம் பிரிந்து ஒரு சிறிய பகுதிக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றோம். அதனால் - நிலப்பிரச்சினையால் நீர்வளம் குறைந்து விட்டது. கேரளநாடு, மேற்குநோக்கி ஓடிக் கடலில் கலக்கும் நீரைத் தமிழ்நாட்டுக்குத் தரமறுக்கிறது. கர்நாடகம் காவிரியில் நீர்விட மறுக்கிறது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாடு வறட்சியால் தொடர்ந்து பாதித்து வருகிறது. பல ஆயிரம் விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். தமிழ்நாடு வளம் பெற முதல்நிலையில் தென்மாநில ஆறுகள் இணைக்கப்பட வேண்டும். வடபுலப் பேராறாகிய கங்கையைக் காவிரியுடன் இணைக்கும் பெரிய திட்டத்தைப் பற்றி எண்ண வேண்டும். உலக வங்கியின் உதவியை நாடவேண்டும். இந்திய - அமெரிக்க அரசுகளைத் தூண்ட வேண்டும். இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் தமிழ்நாட்டின் வளம் நிலையாகக் காப்பாற்றப் பெறும், இஃது ஒருதலையான திட்டம். நவீன இயந்திரங்களும், தொழில் நுட்பங்களும் நிலங்களை ஒருங்கிணைத்து அமெரிக்கா போலவே நமது தமிழ்நாட்டிலும் கடலை, சோளம் முதலியன விளைவிக்கும் பண்ணைகள் அமைக்கலாம். எண்ணெய்த் தேவை நிறைவுபெறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அந்நியச் செலாவணியும் கிடைக்கும். இந்த தரிசு நிலப்பரப்பைச் சாகுபடிக்குக் கொண்டுவர திட்டங்களுடன் முன்வருபவர்களுக்குத் தமிழ்நாடு அறக்கட்டளை உதவி செய்யலாம்.