பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மீண்டும் மேட்டுக்குடி ஆட்சி முறை உருவாகும். இதை விரும்புகிறீர்களா? உங்களில் யாரும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

அதுபோலவே அறிவியலைத் துறைதோறும் தாய் மொழியில் கற்பிக்க முன்வரும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு அறிவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்க உதவி செய்யலாம். நடமாடும் அறிவியல் ஊர்திகள் அமைத்து மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு வழங்கி மாணவர்களுக்கு அறிவியல் கல்வியையும் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வையும் உண்டாக்கலாம். இது தொடர்பாக நம்முடைய சொந்த வேண்டுகோளையும் தமிழ்நாடு அறக்கட்டளை முன் வைக்க விரும்புகின்றோம். பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் அறிவியல் பணிசெய்யும் சுதேசி விஞ்ஞான இயக்கத்திற்கும் மாவட்ட அறிவியல் மன்றத்திற்கும் ஒரு நடமாடும் அறிவியல் ஊர்தி அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது. இத்துறையில் நாம் இப்பொழுது செய்துவரும் பணியை அங்கீகரித்துத்தான் இந்தியப்பேரரசு, நமக்கு தேசீய விருது வழங்கிப் பாராட்டியிருக்கிறது. இந்தப் பணி மேலும் சிறப்பாக அமைய ஒரு நடமாடும் அறிவியல் ஊர்தி வாங்கி வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். இந்த வகையில் தமிழ்நாட்டு அரசு உதவி போதிய அளவு கிடைப்பதில்லை. அதுபோலவே தமிழ்வழிக் கற்கும் தரமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து உதவி செய்தால் இந்தியப் பணித் துறையில் சரிந்துவரும் நமது தகுதியை உயர்த்திக் கொள்ள இயலும்.

இன்று தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமை வளர்ந்து வருகிறது. பணவீக்கத்தினால் ஏற்பட்ட பணப் புழக்கம் கூட கிராமங்களில் இல்லை. கிராமங்கள் வளர்ந்தாலே நாடு வளரும். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்சொன்ன திட்டங்கள் அனைத்தும் உரியனவே. தமிழ்நாட்டில் சில சிற்றுார்களைத் தத்து எடுத்து முழுமையான வளர்ச்சிக்குக்