பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீண்டாமை திருநாளைப்போவார் காலத்திலேயே போயிருக்கும்! அம்பேத்கார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோர் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இன்றையத் தலைமுறையினர் ஒரு குல முறையில் அமைதியுடன் வாழ்ந்திருப்பர். ஆரம்பக் கல்வித் திட்டத்தில் தீண்டாமை விலக்கு சாதி ஒழிப்பு ஆகியன கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இத்தகைய பாடங்கள் முறையாகக் கற்பிக்கப் பெறுவதில்லை; கற்பதும் இல்லை. பல ஆண்டுகளாக,

"சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில்,
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி”

என்ற பாடல் பாடத் திட்டத்தில் உள்ளது. இந்தப் பாடலை முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களுக்கு இந்த உலகில் சாதிகள் இல்லை! இரண்டே இரண்டு சாதிகள்தான்! என்பது உணர்வாக மாறியிருக்கும். இவையிரண்டு சாதிகளும் கூட இயற்கையல்ல! கடவுளின் படைப்புமல்ல! மனிதனின் படைப்பேயாம். உள்ளபடி இரண்டே சாதிதான்! அவை மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மகிழ மகிழ்பவன் உயர்சாதியினன்! மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழும் மனமிலாதான் இழி சாதியினன் என்று இந்தப் போக்கில் இந்தப் பாடல் கற்பிக்கப்பட்டிருந்தால் என்றோ நம்நாட்டில் திண்டாமை அகற்றப்பட்டிருக்கும்! ஆலய நுழைவுச் சட்டமே வேண்டியிருந்திருக்காது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப் பெற்றது. உயர்நிலைக் கல்வியில் ஜமீன்தாரி முறை பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் ஜமீன்தாரி முறை அறிமுகப்படுத்தியதன் மூலம் விவசாயிகள் அடிமைகளாக்கப் பெற்ற செய்தி சொல்லப் பெறவில்லை. ஆதலால், மக்களின்