பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டறிதல் வேண்டும். தற்சலுகையின்றி கண்டறிதல் வேண்டும். உடற்பிணி, உணவாலும் மருந்தாலும் போகும். ஆன்மாவைச் சார்ந்த பிணி நல்ல நூல்களின் கருத்துக்களினாலேயே நீங்கும் நூலகத்தை "உயிர் மருந்தகம்" என்றழைப்பதும் உண்டு.

மாணவ நண்பர்களே! உங்கள் முன்னேற்றத்திற்குத் தடை வெளியே இல்லை. உங்களிடத்திலேயே தடையிருக்கிறது! தடைகளாக இருக்கும் குற்றங்களைக் கண்டுணர்க! அந்தக் குற்றங்கள் நீங்குதலுக்குரிய நூல்களைத் தெரிந்தெடுத்துக் கற்பீர்களாக! தொடர்ந்து கற்பீர்களாக! இங்ஙனம் தொடர்ந்து கற்கும் கல்வியே நமக்குத் துணை. நமக்கு பலம்! இலக்கியங்களில் படிக்கத் தக்கன பழைய இலக்கியங்கள்! அறிவியல் நூல்களில் படிக்கத்தக்கன புதிய நூல்களாகும்.

உண்ணும் உணவு உடலுக்கு வலிமையாதல் போல், கற்கும் கல்வி அறிவாகி, உணர்வாகி, ஒழுக்கமாகி, செயலாகிப் பயன் தரவேண்டும். கற்கும் கல்வி, மனிதத்தை உருவாக்குதல் வேண்டும். ஒரு காலத்தில் கல்வியே கூடப் பிரிவினைக்குக் கருவியாக அமைந்தது. பிற்காலத்தில்தான் பிரிவினைகளை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். ஆனால், இன்னமும் பூரண வெற்றி கிடைத்தபாடில்லை. கல்வி, அன்பையும் இன்பத்தையும் மானுடத்திற்குத் தரவேண்டும். அதுவே கல்வி கற்றலும் கேட்டலும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்கள் ! நாள்தோறும் கற்றலும் கேட்டலும் உடையவர்களைப் பெரியோர் என்று திருஞானசம்பந்தர் போற்றினார்.

"கற்றல் கேட்டலுடையார் பெரியார்”

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு

இன்றைய உலகம் சுருங்கிவிட்டது. ஆதலால் நமது கல்வியும் உலகந்தழுவியதாக அமைதல் வேண்டும். உலகந்தழழீ இய ஒட்பம் நமக்குத் தேவை. நிறைய சாளரங்கள் உள்ள