பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

455


பாதுகாக்கவேண்டும். நம்முடைய நாட்டுப் பொது வாழ்வின் தரம் வரவரக் குறைந்து வருகிறது; வன்முறைகள் வளர்வது வருந்தத்தக்கது. இந்தியா வளரும் நாடாக விளங்கி, நமது இளையபாரதம் வறுமைக்கோட்டினை அகற்றுதல் வேண்டும். இது நமது எதிர்பார்ப்பு.

நமது நாட்டினை வளப்படுத்துவதற்குரிய வாயில்கள் நமக்கு நிறைய உள்ளன. இன்னும் நமது நாட்டில் கோடிக்கணக்கான ஹெக்டர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இந்நிலத்தையெல்லாம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கால்நடை வளர்ப்பு, இன்றுவரை நமது நாட்டில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தொழிலாக வளரவில்லை; இடம் பெறவில்லை. வேளாண்மை அறிவியலும் கால்நடை வளர்ப்பும் இணைந்து, முறையான "அறிவியல் சார்ந்த தொழில் நுட்ப”த்துடன் இயற்றப்படின் நமது நாட்டில் நிலையான பொருளாதாரம் உருவாகும். இன்றைய தொழிலை அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்துடன் இன்றையக் கருவிகள் கொண்டு செய்தால்தான் வெற்றி பெற இயலும். ஆய்வகங்களின் அறிவியல் சார்ந்த முடிவுகளுக்கும் மக்களின் செயற்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படுதல் வேண்டும். விஞ்ஞானத்தை விளை புலன்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி வெற்றி பெறுதல் வேண்டும். அன்றுதான் பாரதம் வளரும்!

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு வெகு வேகமாக முன்னேறி வந்தது. உணவில் தன்னிறைவு அடைந்தது; அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி முதலியவற்றில் முதலிடம் பெற்றது. ஆயினும் அண்மைக் காலமாக ஒரு பின்னடைவு ஏன் ? காரண காரியங்களை ஆய்வுசெய்து காலத்தை வீணாக்குவதில் பயன் இல்லை. நம்முடைய முன்னோர், தலைமுறை தலைமுறையாகப் பல்வேறு சிறந்த இலக்கியங்களையும், விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் கோயில்களையும் தந்து சென்றனர். எங்களுக்கு நேர் மூத்த