பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

குருநாதருக்குக் கட்டை விரலைக் காணிக்கையாய்த் தந்த ஏகலைவன்போல் அன்றி நம்மையே காணிக்கையாய் ஒப்படைக்கப் போகின்றோம் என்பதை அந்நாளில் நாமும் எவரும் அறிந்திடவில்லை. கல்லூரியில் பட்ட வகுப்பு இரண்டாம் ஆண்டு பயின்று கொண்டிருந்த நேரம். மதங்களின் வலிமையை மண்டை ஓடுகளின் எண்ணிக்கையால் மதவெறியர்கள் எண்ணிக் கொண்டிருந்த நேரம். மீண்டும் ஒரு நவகாளி குமரிமுனையில் கருங்கடலுக்கு அருகே செங்கடல் மனிதக் குருதியால் மண்டைக் காடுப் பகுதி முழுவதும் செங்கடல்!

உயிர்ச்சேதம்! பொருட்சேதம்! மதவெறித் தீயை அணைக்க முடியாது அரசு நிர்வாக இயந்திரம் கூட ஸ்தம்பித்தது! குமரிமுனையில் தோன்றிய 'நவகாளி'யை அடக்க எந்த மகாத்மாவைத் தேடுவது? என்று பரிதவித்துக் கொண்டிருந்த வேளையில் குன்றக்குடியில் இருந்து அமைதியின் தூதுவர் குமரிமுனைக் கலவரத்தை அடக்கப் புறப்பட்டார். உயிரைப் பணயம் வைத்த பயணம்.

மகாத்மா நவகாளியில் மதக் கலவரத்தை ஒடுக்கியதைப் போல, மனித நேய மகாத்மா மண்டைக்காட்டுக் கலவரத்தை அடக்கியதை மனித நேயம் விரும்பும் எவரும் எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. நமது உள்ளத்து உணர்வுகள் ஒருங்கே திரள மகாசன்னிதானத்தை எண்ணி அழுத உணர்வுகள் வரிகளாயின. கவிதை இலக்கண வரம்புக்குள் வராத அந்த வரிகளை என்ன பெயரிட்டு அழைப்பது? தெரியவில்லை! நமது உள்ளத்து உணர்வுகளை ஏட்டில் பதிவு செய்து அன்றாடம் அடைகாத்து வந்தோம். பின்னாளில் அந்தக் கவிதை நாம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த ‘மணமலர்' இதழில் வெளிவந்தது. அனுமன் இராமநாமம் செபித்ததைப் போல ‘மணமலர்' ஆசிரியர் பொறுப்பில் இருந்து நாம் எழுதிய முதலும் கடைசியுமான எழுத்து மகாசன்னிதானத்தைப் பற்றிய கவிதை மட்டும்தான் 'மனித நேய மகாத்மாவே' என்று தலைப்பிட்டுத் தொடங்கிய வரிகள் இவைதான்!

“மண்டைக் காட்டில்
மதங்களின் வலிமையை
மண்டை ஓடுகளின் எண்ணிக்கையால்
மதவெறியர்கள் எண்ணிக்கொண்டிருக்கையில்..