பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விழாக்களை நடத்தலாம். அந்த விழாக்களை நடத்தும் பொறுப்புக்களையும் முழுமையாக மாணாக்கர்களிடம் ஒப்படைக்கலாம். அதுபோலவே விளையாட்டு, சமூகப் பணிகள் முதலியவற்றிலும் மாணாக்கர்கள் பங்கேற்கும்படி செய்யவேண்டும். மாணாக்கர்களுடன் ஆசிரியர்கள் தோழமை உணர்வுடன் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. மாணாக்கர்களின் சிந்தனைத் திறனையும், செயல்திறனையும் வளர்க்கக் களப்பணித் திட்டங்கள், கருத்தரங்குகள், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பயிற்சிகள் முதலியன நடத்துதல், கல்வியின் குறிக்கோளை அடைய உதவியாக இருக்கும். வளரும் மாணாக்கர்கள் அறிவை அமைதியாகவே ஏற்பர். அதற்காகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. மாணாக்கர்கள் கல்வியில் ஆர்வம் பெறவும், கல்வி மற்றும் பிற துறைகளில் ஆராயவும், எந்தவொரு கருத்தையும் பகுத்தறிந்து உண்மையையும், புதியனவற்றையும் கண்டுபிடிக்கும் வகையில் கற்பிக்கப் பெறுதல் வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் "அறிவை விரிவாக்கு ! அகண்டமாக்கு!" எனக் கூறியாங்கு மாணாக்கர்களின் அறிவு விரிதற்கு ஏற்றபடி கற்பித்தல் முறை அமையவேண்டும். படித்ததையே திரும்பத் திரும்பப் படித்தல், நெட்டுருச் செய்து ஒப்பித்தல், வாழ்க்கைக்கு இம்மியும் பயன்படாத செய்திகளை மூளையில் திணித்தல் போன்றவை இனியும் தொடர்தலாகா. மாணாக்கர்கள் தங்கள் அறிவுப் பரப்பை வளர்த்துக் கொள்ள வகுப்பறைகள் துணை செய்யவேண்டும்.

"கற்றிவ னாயினும் கேட்க”

என்பது திருக்குறள். அதனால், கல்வியில் மட்டுமன்றி, கேள்வியாலும் கல்வி பெறமுடியும்; அறிவைப் பெறமுடியும். எனவே, தக்கார் பலரின் இனிய ஆய்வுரைகளை, வரலாற்றுக்கு விசை கொடுக்கும் உரைகளைக் கேட்கும் வாய்ப்பு அடிக்கடி வழங்கப்பெறுதல் வேண்டும். மாணாக்கர்