பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூறு சிறுவர்களுக்கு ஓர் ஆசிரியர் எப்படி வகுப்பை நிர்வாகம் செய்வார்? கல்வி கற்பிப்பார்? ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு, ஆகக் கூடுதல் நிலையில் 35 மாணாக்கர்கள். என்ற விகிதம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் பாடப் புத்தகங்களின் சுமையைக் குறைக்க வேண்டும். முதல் இரண்டு வகுப்புகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் பள்ளித் தோட்டம் அமைத்தல், பள்ளிச் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் முதலியவற்றை ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணாக்கர்கள் செய்யப் பயிற்சியளிக்க வேண்டும். விளையாட்டுத் திடலும் பள்ளித் தோட்டமும் இல்லாத பள்ளிகள் கல்விப் பணியை முழுமையாகச் செய்ய இயலாது. உழைப்பில் மாணாக்கன் பெரும் அனுபவத்தைப் பெறுகிறான். அதுமட்டுமல்ல. உழைப்புப் பாடங்களின் வழி திட்டமிடல். கருவிகளை இயக்குதல், செய்தல் முதலிய பயன்பாடுடைய கல்வியையும் பெறமுடியும். ஆரம்பப் பள்ளி மாணாக்கர்களிடம் புலனுணர்வு, வளர்ச்சி, நினைவாற்றல் வளர்ச்சி, கற்பனை வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி ஆகியன முறையே தோன்ற வேண்டும் என்பது உளவியல் கோட்பாடு, கல்வியியலின் நியதி. இன்று இந்த நிலை இல்லை என்பது நாடறிந்த உண்மை. ஆரம்பப் பள்ளியில் கல்வியியல் நியதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டாலே அறிஞன் தோன்றுவான்; மனிதன் தோன்றுவான்.

மாணாக்கரின் பருவ நிலையை உணரவேண்டும்

மாணாக்கன் உயர்நிலைப் பள்ளிக் கல்வி, மேல்நிலைப் பள்ளிக் கல்வி கற்கும் காலம், மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த காலம்! மாணாக்கனின் வயது வளர்ந்து வருகிறது. அதாவது 11-15-16-17 வயது வரையிலான பருவம். இது வளரும் பருவம்; இளம்பருவ மாணாக்க, மாணாக்கியரின்