பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

49


வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் காலம். இது ஏன்? இந்தப் பருவத்தில் பெரியவர்களுக்குரிய குணங்கள் தோன்றத் தொடங்கும். உடலமைப்பு, புதிய பண்பு, சுய உணர்வு, தன் மதிப்பு ஆகிய இயல்புகளும், பண்புகளும் தோன்றும். சமூக நடவடிக்கைகளில் இயல்பாக ஆர்வம் தலைப்படும். இந்த உணர்வைக், கற்பித்தல் மூலம் ஆசிரியர் உலகம் வழிகாட்ட வேண்டும். இந்தப் பருவ காலத்தில் மாணாக்கரிடம் தோன்றும் "பெரியவன்” என்ற உணர்வின் தோற்றத்தையும், அதன் மூல ஊற்றையும் ஆசிரியர்கள் அங்கீகரித்து நயமுடையதாக்க வேண்டும். இந்த வளரிளம் பருவத்தில்தான் பெரியவர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையிலான உறவு முறியக்கூடிய வாய்ப்புக்கள் தோன்றும். இந்தப் பருவ காலத்தில் மாணாக்கர்களுடன் பெரியவர்கள் ஆசிரியர்கள், ஒரு புதிய உறவை - சக வாழ்வு உறவை-வளர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். இந்த முயற்சி கற்பித்தலுக்கு மிக மிக அவசியம்!

செயல்திறனுடைய கல்வி தேவை

இந்த வளரும் இளம் பருவத்தில் தான், மாணாக்கன் தானே படிக்க விரும்பிக் குறிப்புப் புத்தகங்களை நாடுகின்றான். ஏன் ஆசிரியர் கற்பித்தலிலும் மன நிறைவு பெறாமல் இருத்தலால் அல்ல. சுய முயற்சி எண்ணமே அது. எது எப்படியானாலும் ஆசிரியர் - மாணாக்கர்களுக்கிடையேயுள்ள கல்வி உறவில் குறிப்புப் புத்தகங்களை அனுமதிப்பதற்கில்லை. ஆசிரியர் - மாணாக்கர் முறையில் கல்வி கற்றால்தானே விவாதங்கள் தோன்றவும் அவ்வழி சிந்தனை வளரவும் வாய்ப்புகள் ஏற்படும். வளரும் பருவத்துக் கல்வியில் உடல் உழைப்புக் கல்வி கட்டாயம் இடம் பெற வேண்டும். விஞ்ஞானம் - விஞ்ஞான சோதனைக் கல்வி கணிசமான அளவுக்கு இடம் பெறவேண்டும். அறிவியல் சோதனைகளைச் செய்து மாணாக்கன் கற்க வேண்டும்.