பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கல்வியின் தரமும் குறையும். கல்வியை தன்னாதிக்கம் உள்ள ஒரு வாரியத்தில் ஒப்படைப்பது நல்லது. எந்த நாட்டில் கல்வியில் சுதந்திரம் இல்லையோ அங்கு அடிமைத்தனம் வளரும்; பயமும் வளரும். கொத்தடிமைகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? கல்வித் துறையில் அமெரிக்க முறையைப் பின்பற்றுவது நல்லது. அதாவது கல்வியில் எல்லா நிலைகளிலும் - எல்லாப்படி நிலைகளிலும் சுதந்திரம் தேவை. தவறுகள் நேராமல் அரசு கண்காணிக்கலாம்; பாடநூல் நிறுவனங்கள் அரசுச் சார்பு இல்லாமல் சுதந்திரமான ஓர் அமைப்பாக இருக்கவேண்டும். பாட நூல் நிறுவனம் கல்வியியல் நிபுணர்களால் நிர்வாகம் செய்யப் பெறுதல் வேண்டும். ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - பதவி உயர்வு முதலியன ஆசிரியரின் பணித்திறன் மதிப்பீட்டு அடிப்படையிலேயே அமையவேண்டும்.

மாணாக்கர்

மாணாக்கர்கள் கல்வி பயிலும்காலத்தில் கல்வியில் ஆர்வம் காட்டவேண்டும். நல்ல உடல்நலம் பெற்றிருத்தல் அவசியம். தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் இதுவென நிர்ணயித்துக் கொள்ளும் மனப்பான்மையும் மாணாக்கர்களுக்குத் தேவை. மாணாக்கன் நிலையில், கட்டுப்பாடான வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டால்தான் கற்பதில் முன்னேறமுடியும். காலம் போற்றுதல், ஆசிரியர்களை மதித்தல் முதலிய நற்பழக்கங்கள் மாணாக்கர்களுக்கு இன்றியமையாதன. கவர்ச்சியின் வழிச் செல்லாமல், கல்வியிலும் தம்முன்னேற்றத்திலும் மாணாக்கர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். நாள்தோறும் முறையான கல்விப் பயிற்சி, சிந்தனைப் பயிற்சிகளைச்செய்து வளரவேண்டும். "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்றொரு பழமொழி உண்டு. அதாவது காணும் காட்சிகளைக் கூர்ந்து நோக்கி, அவற்றின் அமைவுகளையும் உள்ளீடுகளையும்