பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

59


அரசை வற்புறுத்தலாம். இதைவிட்டுவிட்டு ஆசிரியர்களுடைய நேரம், மாணவர்களுடைய நேரம் என்பதை மறந்து ஆசிரியர் தன்மையை வளர்த்துக் கொள்ளும் பணியில் செலவழிக்காமல், புறம்பான வழிகளில் செலவழிப்பது நேர்மையும் அன்று முறையும் அன்று. ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பது, ஆய்வு செய்வது என்று இருந்தால் நமது பள்ளிகளில், கல்லூரிகளிலேயே பல, புதிய உண்மைகள் வெளிப்படவும் - கண்டுபிடிப்புகள் செய்யவும் வாய்ப்புண்டு என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்தல் வேண்டும்.

நமது நாடு கல்வியில் முன்னேற வேண்டிய நிலையிலேயே இருக்கிறது. இந்த முன்னேற்றம் கற்பிக்கும் ஆசிரியரின் ஆற்றலையும், அவருடைய முயற்சியின் அளவையும் பொறுத்ததேயாம். நமது நாட்டின் முன்னேற்றம் ஆசிரியர் கற்பிக்கும் ஆற்றலையும் மாணாக்கர்களை நெறிப்படுத்தும் பண்பையும் சார்ந்திருக்கிறது என்பதை நமது ஆசிரியப் பெருமக்கள் அறிதல் வேண்டும். இந்த நாட்டில் எந்த நிலையில் தவறுகள் நிகழ்ந்தாலும் அல்லது சோம்பல் நிலவினாலும் நாட்டின் வளர்ச்சிப் போக்கு அவ்வளவாகப் பாதித்துவிடாது! ஆனால், பள்ளிகளின், கல்லூரிகளின், பல்கலைக்கழகங்களின் வகுப்பறைகளில் செய்கின்ற தவறு - செய்யவேண்டாதன செய்தலாகிய தவறு, சோம்பல் ஆகியன நிகழ்ந்தால் நாட்டின் வரலாறே கெடும் என்ற அபாயத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தாகவேண்டும். ஆசிரியர்கள் சமூக வளர்ச்சிக்கும் மாறுதலுக்குமுரிய பிரதிநிதிகளாவர். ஆசிரியர்கள் எப்போதும் புதியனவற்றைத் தேடிய வண்ணம் இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் எதிர்பார்த்தும் எதிர்பாராமலும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடன்றி, அத்தீர்வைச் சமுதாயத்திற்கும் உரிமைப்படுத்தவேண்டும். வளர்ச்சியும் மாற்றமும் இயற்கையின் வரலாற்றின் நிகழ்வு என்பதை அறிந்து உணர்ந்து மாற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.