பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

61


எண்ணிப்பாருங்கள்! ஆசிரியர்களின் பணிகள் சிறந்தால் இக்குறைகள் நீங்குவது உறுதி! நமது நாட்டிற்கு - தேசிய வாழ்க்கையின் தர உயர்வுக்குப் பாடுபட ஆசிரியர்களும் சமூகத்தினரும் பொறுப்பேற்க வேண்டும். நமது நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கும் கல்வி மேம்பாட்டுக்கும் உரிய முயற்சிகள், பயனளிக்காது தோல்வி ஏற்பட்டால், அத்தோல்விக்கும் பல காரணங்கள் உண்டு என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய உண்மை. ஆயினும் ஆசிரியர்களின் தன்மையும் ஈடுபாடும் பெரிய காரணமாக அமையும் என்பதை மறந்துவிடுதல் கூடாது! அதற்கேற்ப நமது ஆசிரியர்கள், சமுதாயத்தை மேம்பாடுறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும்.

இன்று நமது நாட்டை வேலையில்லாத் திண்டாட்டம் வருத்தி வருகிறது. பல நூறாயிரம் இளைஞர்கள் வேலையில்லாமல் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமில்லாமலே அழுதுகொண்டு இருப்பதை மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? நமது கல்வி முறையில் அறிவியல், தொழில் நுட்பங்கள் விரிவடையச்செய்திருக்கும் நிலையிலும் தொழிற் கல்வி விரிவுபடுத்தப்பெற்றும் ஏன், எதனால் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது? கல்வித் துறையில் தொலை நோக்கோடு திட்டமிடத் தவறியமையும், பல ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தையே கற்பதாலும் - கற்பிப்பதாலும் ஏற்பட்டுள்ள இடர்ப்பாடு இது. வளர்ந்து வரும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை ஆற்றுப்படுத்தும் திறமைக் குறைவுமே இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்துக்குக் காரணம் என்பதை உணர்ந்து திருத்தம் காண முயலுதல் வேண்டும். இன்றைய இந்தியா விரைவில் சமூக மாற்றத்தை அடைதல் வேண்டும். இது காலத்தின் கட்டாயம்! சமுதாய மாற்றத்திற்குரிய கருதுகோள்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தோன்றி, அவைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து படித்திருந்தும் செயற்பாடின்மையால்