பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆனால் இன்று கல்வி பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர்களில் 60 விழுக்காட்டினர் கல்வி நலம் பெறாதவர்கள். கல்வியைத் துய்த்தும் அனுபவித்தும் அறியாதவர்கள். அதனால் தானே, கல்விப் பருவத்தில் வேலை செய்யக்கூடாது; பள்ளிக்கு வரவேண்டிய வயது வந்த அனைத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பது நமது ஆசை, நியதிச் சட்டமானது. ஆனால் நடைமுறையில் வெற்றி கிடைக்கவில்லை, குழந்தைகள் வேலை பார்ப்பதை தடைசெய்யக்கூடிய அளவுக்கு நமது முயற்சியும் இல்லை; பெற்றோர்களின் சூழ்நிலையும் இல்லை. ஆயினும் பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளைக் கல்வியில் ஈடுபடச் செய்வது அவசியம். இந்தப் பணியை ஆங்காங்குள்ள மாதர் சங்கங்கள், இளைஞர் மன்றங்கள், திருக்கோயில்கள், செய்யலாம்.

பெற்றோர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வந்தால் தான், குழந்தைகளின் கல்விப் பயணம் முழு வெற்றிதரும். குழந்தைகள் பள்ளிக்கு வராமல் நிற்க அடியிற்கண்ட காரணங்கள் உண்டு.

1. பல குடும்பங்களில் தாய், தந்தை வேலை செய்யப் போவது, இத்தகைய குடும்பங்களில் அடுத்த சிறு குழந்தையை வைத்துக்கொள்வது ஒரு பிரச்சனை. முதலமைச்சர் சத்துணவு மையங்கள் ஓரளவு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தாலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பிரச்சனை தொடர்கின்றது. இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க ஊர்தோறும் "குழந்தைகள் காப்பகங்கள்" அமைத்து உதவி செய்து, அந்த மழலைப் பருவத்திலேயே கல்வியை விளையாட்டின் மூலம் அறிமுகப்படுத்தலாம். தக்க செல்வர்கள் அல்லது திருக்கோயில்கள், திருமடங்கள், முதலமைச்சர் சத்துணவு மையங்கள் தத்து எடுத்துப் பாடப் புத்தகங்கள், கணிதம் கற்பிக்கும் கருவிகள், மூளையை இயக்கும் விளையாட்டுப் பொம்மைகள், வாங்கிக் கொடுப்பது பயனுடையதாக அமையும். இந்த இரண்டு