பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடடையச் செய்வதில் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பைப் பெறவேண்டும். அனைத்து மட்டக் கல்வி நிறுவனங்களிலும் பெற்றோர் - ஆசிரியர் தொடர்பு மையங்கள் உயிர்ப்புடன் இயங்கச் செய்யவேண்டும்.

‘தங்களுடைய பிள்ளைகளை நாடறிந்த சான்றோனாக ஆக்குவதன் மூலமே மனையறத்தின் பயனை அடைய முடியும். ‘‘நல்ல தாய்”, “நல்ல தந்தை” என்ற புகழை அடைய ஒவ்வொரு பெற்றோரும் முயற்சி செய்யவேண்டும். தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் சீரான வளர்ச்சிக்கும் செலவழிப்பதை மகிழ்வுடன் செய்யவேண்டும். இளமைக் காலத்தில் குழந்தைகளிடத்தில் மனமுறிவு ஏற்பட அனுமதிக்கக்கூடாது. தங்கள் பிள்ளைகள் தானே என்றும், இளையோர் என்றும் கருதி அலட்சியப்படுத்தாமல் அவர்களுடன் தோழமை உணர்வுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக் கலந்துரையாடி மகிழ்வது, குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணையாக அமையும். சிவபெருமான் முருகனிடம் பிரணவப் பொருள் கேட்டறிந்த வரலாற்றின் உட்பொருளும் இதுவேயாம்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கல்விச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளத் தாராளமாக உதவி செய்ய வேண்டும். பல இடங்களைப் பார்ப்பதன்மூலம் பல்வேறு பட்ட சமூகத்தினருடன் கலந்து பேசிப் பழகுவதன் மூலமும் இளைஞர்களின் அறிவு விரிவடையும்; புத்துணர்வு பெறுவார்கள்; மனித குலத்தை நேசிக்கும் உயரிய பண்பைப் பெறுவர். கல்விச் சுற்றுலாவில் செலவிடும் முதலீடு, பலமடங்கு பயன்தரும் என்பதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படித்து மகிழ, நல்லதோர் நூலகம் அமைத்துத் தருவதைத் தலையாய கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.