பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடிவெடுக்கும் - தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டு. நமது நாட்டில் கல்வி பயிலும் அனைத்து நிலைகளிலும் சிந்தனையைத் துண்டும் தாய்மொழி வழிக் கல்வியே தேவை. தாய்மொழி வழிக் கல்வி - மக்களிடத்தில் சென்று துணையாக அமையும்.

மொழிச் சிக்கல்

இந்தியா சிக்கல்கள் நிறைந்த நாடு. உண்ணும் உணவிலிருந்து உயர் மனிதனை உருவாக்கும் உணர்வுவரை இங்குச் சிக்கல்தான். இந்தியாவில் சிக்கல் இல்லாத துறை ஏதாவது உண்டா? நாடு ஒரு நாளாவது அமைதியாக நகர்ந்ததுண்டா? சிக்கல்களை உருவாக்குவதன் மூலமே வாழ்க்கையை நடத்துகிறவர்கள் இன்று பலகிவிட்டனர். நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையுமாக நாடு துக்கச் சுமையைத் துரக்கிக்கொண்டு நகர்கிறது. ஏன்? நல்ல தரமான பண்பாட்டுக் கல்வி வழங்கத் தவறியதன் விளைவே காரணமாகும். வளரும் இளைஞர்களுக்கு உயர்ந்த இலட்சியத்தை - குறிக்கோளைக் காட்டி வழிகாட்ட, வழி நடத்தத் தவறிவிட்டோம்! வழிகாட்டும் தகுதியை நாம் பெற்றிருக்கிறோமா? இதுவே ஒரு பெரிய கேள்வி.

எந்த ஒன்றையும் உணர்ச்சியுடன் அணுகும் பழக்கம் நாட்டில் வளர்ந்து வருகிறது. நமது மொழி, அந்நிய மொழி என்ற அணுகும் முறை உணர்ச்சியைத் தூண்டத்தான் செய்யும். அதற்குப் பதிலாக உலகமாந்தர் பேசும் மொழிகள் அனைத்தும் நம்முடைய மொழிகளே! அதில் நமது தாய்மொழி ஒன்று. தாய்மொழி உரிமையுடைய மொழி. மற்ற மொழிகள் உறவு மொழிகள் என்பதை உணரவேண்டும். ஒவ்வொருவரும் எத்தனை மொழிகளைக் கற்க இயலுமோ அத்தனை மொழிகளைக் கற்கவேண்டும். “நான்கு மொழிகள் கற்றவன் நான்கு மனிதர்களுக்கு ஈடாவான்” என்று மன்னர் சார்லஸ் கூறினான். நம்முடைய நாட்டில் மூன்று மொழித்