பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கல்வியிலும், தாய் மொழிப் பண்பிலும் சிறந்து விளங்குகிறவர்கள் பிற மொழிகளை எளிதில் கற்க முடியும்; கற்க வேண்டும். இந்தியாவைக் கண்டுணர்ந்து அனுபவிக்க வேண்டுமானால் இந்திய மொழிகள் பலவற்றையும் கற்கும் முயற்சி தேவை. அரசும், சமூகமும் பல மொழிகளைக் குறைந்த காலத்தில் கற்பதற்குரிய மையங்களைத் தோற்றுவித்து வசதிகள் செய்து தரவேண்டும்.

கல்வி மொழி

இன்று நமக்குக் கல்வி மொழி எது? இன்று தமிழ்நாட்டில் கல்வி மொழி ஏழைகளுக்குத் தமிழ்; வசதியும் வாய்ப்புமுடையவர்களுக்கு ஆங்கிலம். கல்வி மனிதர்களை ஒன்றுபடுத்தும் சாதனம்! ஆனால், இங்குக் கல்வியே இரண்டு வகையாக இருக்கிறது. கல்வியில் இரண்டு சாதி உருவாகிறது. இது அவசியம் தானா? அல்லது நியாயமா?

கல்வி மொழி தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து உலகந்தழீஇய உண்மை. அந்நிய மொழியாகிய ஆங்கிலம் கல்வி மொழியாக இருக்குமாயின் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்று அம் மொழியறிவை வளர்த்துக் கொள்வதே நோக்கமாகிவிடும். தாய்மொழியாயின் அம்மொழி பற்றிய அறிவும், இலக்கண வரம்பும் இயல்பாகவே அமைந்துவிடுவதால் தாய் மொழியை ஒரு மொழியாகக் கற்கவேண்டிய அவசியமில்லாமல் நேரடியாகப் பொருளறிவு பெறும் முயற்சி ஏற்படும். ஆங்கில வழிக் கற்கும்பொழுது மொழியறிவு முட்டுப்பாடு இருப்பதால் பெறும் பொருளறிவு குறைவாகிவிடும். தாய்மொழி வழிக் கற்றால் பொருளறிவு கூடுதலாகப் பெறமுடியும். தாய்மொழி வழியே அறிவியலில் பல துறைகளையும் கற்பது எள்ளிது. தாய்மொழியில் சிந்தனைக் கிளர்ச்சி எழுவதைப்போல அந்நிய மொழிகளில் ஆங்கிலத்தில் தோன்றுவதில்லை. ஆங்கில வழிக் கல்வி என்பது ஒரு சுமை என்பதை அறிக. தாய்மொழி வாயிலாகத்தான் எளிதில் மக்களை அணுக