பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாட்டுக் குழு தீர்மானித்தது. ஆங்கிலம் பயிற்சி மொழியாகத் தொடர்ந்து இருப்பது இந்திய மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் தாய் மொழி வழிக் கல்வியே வழங்கப்பெறுகிறது. இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மொழிக்கு வரி வடிவம் - எழுத்துக் கண்டனர். ஜப்பான் நாடு, தாய்மொழி வழிக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் இன்று அந்தநாடு, அறிவியலில், தொழில் நுட்பத்தில் உலக நாடுகளில் சிறந்து விளங்குகின்றது. எந்த ஒரு ஜப்பானியனும் இந்தியனைப்போல் - தமிழனைப்போலக் கையறு நிலையில் இல்லை. சிந்தனையைத் தூண்டாத, சிந்திக்கத் துணை செய்யாத மொழி வழியே கல்விப் பெறுவது தற்கொலைக்குச் சமம். உண்மையில் அறிவுபெற விரும்பினால் தாய்மொழி வழிக் கல்வியே தேவை. உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும், அந்நிய மொழி, கல்வி மொழியாக, பயிற்று மொழியாக இல்லை. சோவியத் ஒன்றியத்தில் மாநிலங்கள் அனைத்திலும் தாய்மொழி வழிக் கல்வியே அன்றும் நடைமுறையில் இருந்தது; இன்றும் இருக்கிறது. இன்று சோவியத் நாட்டின் அறிவியல் வளர்ச்சி சாதாரணமானதா? சோவியத் ஒன்றியத்தின் பொது மொழியாகிய ருஷ்ய மொழி, புரட்சிக்குப் பின்தான் வளரத் தொடங்கியது. தமிழுக்கோ மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு; இலக்கியம் உண்டு; இலக்கணமும் உண்டு.

தமிழ் ஒரு பழைமையான மொழி வளர்ந்து வரும் மொழி. அப்படியானால் தமிழில் ஏன் அறிவியல் கற்பிக்கக் கூடாது? முடியாதா? தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்று காரணம் கூறுவர். தமிழ் வழிக் கல்வியைத் தொடங்கித் தொடர்ந்து நடைபோட்டால்தான் நூல்கள் வெளிவர இயலும், பாடப் புத்தகங்களுக்காகக் காத்திருக்க இயலாது, காத்திருக்கக் கூடாது. தாய்மொழி வழிக் கல்வி நடைமுறைக்குப் புத்தகங்கள் இல்லை என்று காத்திருப்பது பற்றி