பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

79


வங்கத்துக் கவிஞர் ரவீந்திரநாத தாகூர் “தழைக்குப் பின் மரம், கரைக்குப் பின் நதி” என்று இருப்பது போல ஆகும், என்று கூறியதை உய்த்துணர்க. அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி வழிக் கல்வியை வற்புறுத்தினார். அதுவும் உடனடியாகச் செய்யவேண்டும் என்றார். மேலும் “தாய்மொழி வழிக் கல்வியைக் கட்டாயமாக உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; இதில் தாமதம் ஏற்படுமானால் சோர்வு வளரும். ஒரு நாடு சோர்வைத் தாங்கிக் கொள்வதைவிட, குழப்பத்தைத் தாங்கிக்கொள்வது நல்லது” என்றார் அண்ணல் காந்தியடிகள். தாய்மொழி வழிக் கல்வி வழங்குதல் மூலம் உடல், உள்ளம், ஆன்மா இம் மூன்றும் வளரும் என்பது அண்ணல் காந்தியடிகளின் திடமான நம்பிக்கை.

ஆங்கிலத்தை நீட்டிக்கவிடக்கூடாது

தாய் மொழி வழிக் கல்விக் கொள்கையினால் ஆங்கிலம் அகற்றப்படுமா? அப்படி ஒன்றும் இல்லை. தாய் மொழியில் - தமிழில் அறிவியல் துறைகள் கற்கப்படுவதன் மூலம் ஆங்கிலம் அகற்றப்படாது; ஆங்கிலம் அகற்றப்பட வேண்டிய அவசியமும் இல்லை. ஆங்கிலம் ஒரு மொழியாகக் கற்கப்பெறும். மொழிப் பாடம் வேறு, பயிற்சி மொழிவேறு, தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். எல்லா மட்டங்களிலும் தாய் மொழி வழியே - தமிழ்மொழி வழியே கல்வி கற்பிக்கப் பெறுதல் வேண்டும்; சோதனைக்குக் கூட ஆங்கிலம் பயிற்று மொழியாக நீடிக்க அனுமதிக்கக்கூடாது.

ஆதிக்கத் தீமை

தாய்மொழி வழி - தமிழ்மொழி வழிக் கல்வி உழுத நிலத்தில் பெய்த மழை போன்றது! ஆங்கில வழிக் கல்வி கற்பாறையில் பெய்த மழை போன்றது.

தமிழ்நாட்டில் தாய்மொழி வழிக் கல்வியை - தமிழ் மொழி வழிக் கல்வியை விரும்பாதவர்கள் தடையாக