குன்றக்குடி அடிகளார் தமிழுக்கு
வழங்கிய கொடை
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்
குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை 16 தொகுதிகளில் 6000 பக்க அளவில் செம்பதிப்பாக மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 1999இல் தவத்திரு பொன்னம்பல அடிகளார் தலைமையில் குழு அமைக்கப் பெற்றது. அடிகளாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், 60க்கு மேற்பட்ட நூல்கள் அரும்பாடுபட்டுத் தேடித் தொகுக்கப் பெற்றன. பொருண்மை கருதி ஐந்து தலைப்புகளில் அவை வகை செய்யப் பெற்றன.2002நவம்பரில் 16 தொகுதிகளும் அச்சுப்பணி நிறைவுபெறுகிறது.
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் எழுத்துக்கள் அனைத்தையும் தொகைப்படுத்தி வெளியிடும் விதை என் நெஞ்ச நிலத்தில் நட்டேன். அதற்கு நீரூற்றி உரம் இட்டுப் பூத்துக் குலுங்கச் செய்த புண்ணியர் பொன்னம்பல அடிகளார். குன்றக்குடி அடிகளார் வகுத்த அறங்களை வளர்ப்பதும் திருமடத்தின் மரபுகளையும் பெருமையையும் பேணிக்காப்பதும், அடிகளார் புகழ் பரப்புவதும் தம் கடமையாகக் கொண்டு பொன்னம்பல அடிகள் விரதம் பூண்டு, வீறு கொண்டு செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் பெருமுயற்சியின் பெருவிளைவே இப்பெருந்திட்டம். குன்றக்குடி அடிகளாரின் செயலராக,நிழலாக இருந்த பரமகுருவின் பங்களிப்பு பெரியது. மிகப்பெரியது. அவர் இன்றி இந்நூல்வரிசை வெளிவந்திருக்காது. அடிகளாரின் அசைவுகள், நினைவுகள் அனைத்தும் பரமகுருவின் நெஞ்சில் பதிவாகி விட்டன.