பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

93


டி.பி.ஏ. ராசமாணிக்கம். அவர் தயார் செய்து வைத்திருந்த கவர் அது. கவர் தயார் செய்யப் பயன்படுத்தி இருந்த பிளேடை அந்தக் கவருக்குள்ளேயே வைத்திருக்கிறார். அவர் ஒட்டிய கோந்தின் ஈரம் பிளேடின் இருபுறமும் படிந்து பிடித்துக் கொண்டிருக்கிறது! தபாலில் அது செருகி இருந்ததால் பிளேடு வெளியே வந்திருக்கிறது. இது வேண்டும் என்று செய்த தவறில்லை. தவறாக இல்லாமலும் போகலாம். ஆனால் குற்றம்தான். இதை ரெங்கநாதன் உணராமல் இல்லை. அழாமலும் இல்லை. ரத்தினம்பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்டுக் கும்பிட்டான், ஆயினும், அவரின் திட்டுதல் குறைந்தபாடில்லை.

பிள்ளையவர்களின் கோபத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ரெங்கநாதன் அலுவலகப் பெட்டிச் சாவியை அவர் முன் எடுத்து வைத்தான்! “மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

இந்தச் சம்பவ நேரத்தில், மகாசந்நிதானம் அவர்கள் அந்த வழியாகப் பங்களாத் தோட்டத்துக்குச் செல்லும்போது நின்று கவனித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மகாசந்நிதானம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது! ரெங்கநாதன் சென்று வீழ்ந்து வணங்கி நின்றான்! கேவிக் கேவி அழுதான். மகாசந்நிதானம் அவர்கள் ஆறுதல் கூறினார்கள்! ரத்தினம் பிள்ளையும் வந்து சேர்ந்தார். வந்தது மட்டுமின்றிப் புகாரையும் சொன்னார். "வேலையை விட்டுப் போவதாகக் கூறுகிறான்.... போகட்டும்! இந்த மாதிரிப் பொறுப்பற்ற பசங்கள் தேவையில்லை" என்று பொரிந்து தள்ளினார். ஆனால் மகாசந்நிதானம் அவர்கள் மன்னித்தார்கள்! ரத்தினம்பிள்ளைக்குச் சமாதானம் கூறினார்கள். பணி தொடர்ந்தது.. ரெங்கநாதனின் நடை, உடை, பாவனைகள் மகாசந்நிதானம் அவர்களைக் கவர்ந்த நிலையில் ஆபத்தில்லா வாழ்க்கை நீடிக்கிறது.