பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

99


தனியே நடந்து வந்து கொண்டிருந்தார். நல்ல இளமை! இருபத்தோரு வயது. பரதேசிக் கோலம்! நடுவில் சந்தித்தவர் ஒருவர் கந்தசாமிப் பரதேசியை மிரட்டிவிட்டார். அவர் வாயில் வந்த வார்த்தைகளெல்லாம் எழுதும் தரத்தில் அல்ல!

"ஏண்டா! உழைத்துச் சாப்பிடாமல் பிச்சை எடுக்கிறாய்?" என்பது அவருடைய வினா! முதலில் அதிர்ச்சியடைந்தாலும் அழுதாலும் பின் தேற்றிக் கொண்டு, அவருக்குத் தன்னிலை விளக்கம் அளித்து வெற்றி பெற்றார் கந்தசாமிப் பரதேசி! பின் அவரே சாலை வரையில் துணை வந்தார்.

நமது சமயத்தில் காவி உடை, திருநீறு, உத்திராக்கம் போன்ற புனிதச் சின்னங்கள் பிழைப்பின் சாதனங்களாக மாறிவிட்டன! பல்லாயிரக்கணக்கில் பிச்சைக்காரர்கள் இந்தக் கோலத்தில் வயிற்றுக்குக் கேட்டு அலைவது வெட்ககரமான செய்தியே!

கன்யாகுமரி வரையில் யாத்திரை தொடர்ந்தது! இளமையிலேயே கந்தசாமிப் பரதேசிக்கு விவேகானந்தரின் தாக்கமும் உண்டு! நடுத்திட்டுக்குப் பக்கத்தில் உள்ள மண்மேடு என்ற ஊரில் இருந்த மாவட்டக்கழகப் பள்ளியில் ரெங்கநாதன் ஆரம்பக் கல்வி பயின்றவன். இந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்த சாரங்கபாணி நாயுடு என்பவர் இராமகிருஷ்ணமிஷனில் பிற்காலத்தில் சேர்ந்தார். அவருடைய செல்வாக்கின் பயன் இது!

விவேகானந்தர் கன்யாகுமரிக் கடலில் உள்ள குன்றின் மீது உட்கார்ந்து தவம் செய்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி! கந்தசாமிப் பரதேசியும் அந்தக் குன்றுக்குச் சென்று சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்தார். ஒருவாறாக, 47 நாள் யாத்திரையை முடித்துக்கொண்டு தருமபுர ஆதீனத்துக்குத் திரும்பி வந்தார். பெற்றோரும் கைவிட்டு விட்டனர்.