பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடுத்து வந்த கார்த்திகை மாதம் திங்கட்கிழமையன்று கந்தசாமிப் பரதேசிக்கு மந்திரக் காஷாயம் வழங்கினார்கள் மகாசந்நிதானம் அவர்கள், கந்தசாமிப் பரதேசி கந்தசாமித் தம்பிரான் ஆனார். எதையும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்று உணர்த்தியது மந்திரக் காஷாயம்!


8
ருமபுரத்தில் நாம் குட்டித் தம்பிரானாகிப் படித்துக் கொண்டிருந்த காலம். குட்டித் தம்பிரான் என்றால் மடங்களில் சந்நியாசம் பெற்றுப் பயிற்சி பெறுபவர். அந்தக் காலத்தில்தான் தருமையில் கல்லூரி தொடங்கப்பெற்றது. அப்போது தருமபுரம் ஆதீனத்தில் பி. சுந்தரம் பிள்ளை என்றொரு தமிழறிஞர் இருந்தார். நல்ல தமிழறிஞர். தமிழ் இலக்கியங்கள் அவருக்கு மனப்பாடம். திருக்கோவையாரை அருமையாகச் சுவைத்துப் பாடுவார். அவர் சமயப்பாடம் நடத்தினார். அவர் நடத்தும் நடை பழங்காலப் பண்டிதர் நடை. நாங்களோ புதிய தலைமுறையினர். முறுக்கை ஊற வைத்துச் சாப்பிடும் இளைஞர்கள். சமயப்பாடம் புரிய வில்லை .
நம்முடன் காவிரிக்கு வந்தவர்களிடம், "படித்தால் நன்றாக விளங்கிப் படிக்க வேண்டும் இல்லையானால் படித்து என்ன பயன்?” என்று கூறி, "குட்டுப்பட்டால் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்” என்றும் கூறினோம். இந்தப் பழமொழி காவிரிக் கரையில் செடிகளின் மறைவில் இருந்த ஒருவர் காதில் விழுந்திருக்கிறது. இது பெருந் தீயாகப் பற்றி எரிந்தது.
இந்து சமயத்தில் துறவிகளிடத்தில் கூட இணக்கம், ஒற்றுமை காண்பதரிது. ஒரு துறவி போனவழியில் இன்னொரு துறவி போகமாட்டார். பழைய புராணங்களில் கூட விசுவாமித்திரர், வசிஷ்டரிடையே நல்ல உறவு நிலவிய