பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும் நள்ளேன் நினதடி யாரொடல்லால்,'

என்ற திருவாசகப் பாடல் நினைவுக்கு வந்தது.... சிந்தனைக்கு வாயிலாக இருந்தது.

"தயவு செய்து போய் வாருங்கள்! நமக்குப் பட்டமும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம்!” என்று கடிந்து கூறி அனுப்பி வைத்தோம்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் நமது ஆன்மாவைப் பக்குவப்படுத்த உதவி செய்தன.

ஆதலால், 'உறுதியான அன்பு, பக்தி மனிதனை வளர்க்கும்' என்பது உண்மை!


9

ருமபுர ஆதீனத்தின் கந்தசாமித் தம்பிரானின் கல்வி பயிலும் வாழ்க்கை வளர்ந்தது. கல்லூரியில் முறையாகத் தமிழ் படிப்பு! அப்போது பெரும்பள்ளம் என்ற ஊரில் நாகலிங்கம் என்பவர் இருந்தார். இவர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர். திருக்கடவூரில் கட்டளை தம்பிரானாக இருந்தபோது பழக்கமானவர். அவரிடம் ஆங்கிலப் படிப்பு, உலகம் தெரிந்து கொள்வதற்கு! செய்தித்தாள் வழக்கம்போல் படித்தலும் நிகழ்ந்தது.

1946-லிருந்து அறிஞர் அண்ணாவின் "திராவிட நாடு', பின் 'காஞ்சி' இதழ்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அறிஞர் அண்ணாவிடம் மதிப்பு உணர்வு வளர்ந்து வந்தது! அதற்குக் காரணம் தமிழேயாகும்! உடன்படா நிலைபாடுகளும் இருந்தன ஆயினும் அறிஞர் அண்ணாவுடன் கொண்ட தொடர்புகள் அனைத்தும் அவரிடம் மதிப்பு உணர்வை நாளும் வளர்த்தது. அவர் ஒரு சிறந்த மனிதர்... தவைவர்!