பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

107


அறிஞர் அண்ணாவின் நினைவு வரும்போதெல்லாம் கண்கள் குளமாகின்றன. ஏன்? அவர் இருந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது! யாராலும் நிரப்ப முடியவில்லை... முடியாது! அக்காலத்தில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் “பெரியபுராண ஆராய்ச்சி” என்ற ஆய்வுநூல் எழுதி வெளியிட்டிருந்தார். அறிஞர் அண்ணா இந்த நூலை எதிர்மறையாக விமரிசித்துத் ‘திராவிட நாடு' இதழில்’ அன்பரது ஆராய்ச்சியும் அறைகூவல்களும்' என்று எழுதியிருந்தார். கந்தசாமித் தம்பிரான் பெரிய புராணம் படிக்கத் தொடங்கி இருந்த காலம்...உடனே 'அறிஞரின் ஆராய்ச்சியும் விளக்கமும்' என்ற தலைப்பில் மறுப்பு எழுதினார் கந்தசாமித் தம்பிரான்.

அக்காலத்தில் ஜகந்நாதாச்சாரியார் என்ற பெரியவர் ‘தார்மீக இந்து’ என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தி வந்தார். இந்த இதழ் செத்துச் செத்துப் பிழைத்துவரும் நாத்திக இயக்கங்களுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் கடுமையான முறையில் மறுப்பு எழுதுவார் ஜகந்நாதாச்சாரியார். அப்போது விவாதத்தில் இருந்த இந்து அறநிலையச் சட்டத்தை எதிர்த்தார் அந்தப் பெரியவர். அவ்வப்போது திருமடங்களுக்கு வந்து 'தார்மீக இந்து' வளர்ச்சிக்கு நன்கொடை பெற்றுச் செல்வார். தருமபுர ஆதீனத்துக்கு வரும் அறிஞர்களிடமெல்லாம் கந்தசாமித் தம்பிரான் நன்றாகப் பழகி உறவு கொண்டு விடுவார். ஆம்! அறிஞர்கள் உறவு, பல ஆண்டுகள் படித்த பயனைத் தருமல்லவா? 'தார்மீக இந்து' ஜகந்நாதாச்சாரியாருடன் பழகி உறவு கொண்டாடி ‘தார்மீக இந்து’வில் சில பக்கங்கள் எழுதும் உரிமை பெற்றுவிட்டார் கந்தசாமித் தம்பிரான்!

அறிஞர் அண்ணாவின் பெரிய புராண ஆராய்ச்சி மறுப்புக்கு மறுப்பு இந்த இதழில் பிரசுரமாயிற்று. 'தார்மீக இந்து'வில் தொடர்ந்து எழுதி வந்தார் கந்தசாமித் தம்பிரான்! அறிஞர் அண்ணாவின் அடிப்படைக் கொள்கையாகிய