உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

சிந்தனைக் களங்கள் பல உள என்பதை உணர்கிறோம். அடிகளாரின் எழுத்தும் பேச்சும் இளைஞர்களை ஈர்த்தன. புதியதோர் உலகம் செய்ய வழிவகை செய்தன. நீடுதுயில் நீங்க - சமய உலகம் விழிப்புணர்வு கொள்ள அடிகளார் ஆற்றிய பணிகள் தனித்ததோர் பேராய்வுக்கு உரியன.

அவர் பேச்சுக்கள், எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்து வழங்குகிற பெரும்பேறு. தனிப்பேறு மணிவாசகர் பதிப்பகம் பெற்றபேறு.

கார்ல் மார்க்ஸை எடுத்துரைக்கும் காவி உடையினர். மதக் கலவரங்களை முன்னின்று தீர்க்கும் முன்னோடி. தமிழ்நாட்டுத் திருமடங்களுக்கு ஒட்டுமொத்தப் பெருமை சேர்த்த உயர் மதியாளர். உயர்தரும நெறிகளை ஓயாது பேசியும் எழுதியும் வந்தவர். எளியோர் வாழ்வு உயர, குன்றக்குடித் திட்டம் கண்ட அடிகளார் பெருமைகள் பேசி முடியாது. அடிகளார் உருவாக்கிய கோட்பாடுகள் பல. கோயிலைச் சார்ந்த குடிகள், குடிகளைச் சார்ந்த கோயில் என்பன போன்ற தொடர்கள் இவர் எழுத்துக்கள் முழுதும் விரவிக் கிடக்கின்றன.

தமிழ் வழிபாடு

தமிழ் அருச்சனை

தமிழ் ஆட்சி மொழி

முதலிய தமிழியக்கச் செயற்பாடுகளால் அடிகளார் ஆற்றிய அடிப்படைப் பணிகள் அளவிடற்கரியன.

அடிகளாரை 50 ஆண்டுகளாக அறிந்த நான் அவர்தம் 50 ஆண்டு எழுத்துக்களை ஒரு சேரத் தொகுத்து நூற்றொகையாக்கி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியதை என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்.

அடிகளார் பூர்வாசிரமத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊராகிய இராமச்சந்திரபுரத்தில் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர். என் தந்தையார் குங்கிலியம் பழ. சண்முகனாருடன் நெருங்கிப் பழகிய கேண்மையர், அடிகளார் தம் வாழ்க்கை வரலாற்றில் என் தந்தையாரைப் பற்றி (தொகுதி 16) நெஞ்சம் நெகிழ எழுதிஉள்ளார்கள். அண்மையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி இயற்கை எய்திய என் தந்தையார் நினைவு போற்றி இக்கருத்துக் கருவூலத்தை வெளியிடுகிறேன்.

புதிய தமிழ் இலக்கியத்திற்குக் கொடையாக அடிகளார் வழங்கிய இந்நூல் வரிசை, தமிழ்ச் சிந்தனைப் போக்கின் திருப்புமுனையாக அமைந்த நூல்களுள் சிறப்பிடம் பெறும் என்பது என் நம்பிக்கை

இத்தொகை நூல் செழுமைபெறத் துணைநின்ற பதிப்புக் குழுவிற்கும் மெய்யப்பன் தமிழாய்வக அறங்காவலரான என் மகன் மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் அனைத்துத் தொகுதிகளையும் வலிவோடும் வனப்போடும் பொலிவோடும் அச்சிட்டு வெளிக்கொணர்ந்த மேலாளர் இரா. குருமூர்த்திக்கும் நன்றி.