பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கழகத்தைக் கண்ட செட்டிநாட்டரசர் குடும்பம் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். செட்டிநாட்டரசர் மு.அ.மு. இராமசாமியால் செய்ய முடியும், செய்வார் என்று தமிழகம் எதிர்பார்க்கிறது.

இங்ஙனம் தமிழுணர்வு வளர்ந்து வரும் வேளையில், ஒரு நாள் எதிர்பாராத நிலையில் தலைவர் பெரியார், "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி!” என்று கூறினார். தமிழ் விழாக்கொண்டாடும் தைத் திங்கள்-பொங்கல் நாளில் சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டித் தொழிற்சாலிைல் பொங்கல் விழா! தமிழர் திருநாள்! நாமும் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள். அப்போது நாம், "தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்று பெரியார் கூறியிருப்பதை முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். உடனே அறிஞர் அண்ணா பரபரப்பு உணர்வுடன் "பெரியாரின் கருத்தை மறுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். நாம், "இல்லை! அண்ணாவின் கருத்தறிந்து செய்ய எண்ணியதால் உடனே மறுக்கவில்லை" என்றோம். அண்ணா அமைதியாக "மறுக்காதீர்கள்! மறுத்தால் திரும்பத் திரும்பச் சொல்வார்! மறுக்காமல் விட்டுவிட்டால் சும்மா இருப்பார். இது பெரியாரின் பழக்கம்!” என்றார். மேலும், "வீட்டிலே பெரிய வர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ள மாட்டோமா? அது போலத் தமிழகத்தில் பெரியார்! மறுக்க வேண்டாம்!” என்றார். எவ்வளவு இதமான பழக்கங்கள், வழக்கங்கள் அண்ணாவிடம் இருந்தன. ஆம். உண்மைதானே! பலரும் கூடி வாழ வேண்டுமாயின் முரண்பாடுகளை-மாறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல்-விரிவு படுத்தாமல் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மீதுள்ள மதிப்பீட்டைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. மன முறிவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற வாழ்வியல் உண்மையே சமுதாய உருவாக்கத்துக்குத் துணை செய்யும்.