பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

135


ஷராப்பாக (காசாளராக) இருந்தவர் சீனிவாச ஐயங்கார் என்பவர்! இவரும் நல்ல நிர்வாகி. சமய ஆசாரங்களை விடாது கடைப்பிடித்து ஒழுகுபவர். இவர் நெற்றியில் திருமண் சார்த்திய பொலிவு எப்போதும் இருக்கும். இவர்கள் இருவருமே கந்தசாமித் தம்பிரானைப் பொறுத்தவரையில் நல்ல உறவு. ஏன்? இவர்களை மதித்தும் பாராட்டியும் அடிக்கடி ஆலோசனை கேட்டும் கந்தசாமித் தம்பிரான் பழகியதே காரணம்.

அன்று மாலை திருக்கோயிலுக்கு வருவது பற்றிக்கூட ஐயங்காருடன் ஆலோசனை செய்யப்பெற்றது. கந்தசாமித் தம்பிரான் மேற்குக் கோபுரவாசல் வழியாகத் திருக் கோயிலுக்குள் நுழைந்து மேற்கு வெளிப் பிராகாரம் போய்ச் சேருகிறார். இங்கு காலியிடங்களில் தோட்டம் முதலியன உண்டு. பின், வடக்குப் பிரகாரம் செல்லத் திரும்பும்போது ஒரு திருக்கோயில் விமானம் தெரிந்தது. கட்டளைச் சேவகரிடம் கந்தசாமித் தம்பிரான், "இது என்ன கோயில்?” என்று கேட்டார்! கட்டளைச் சேவகர், “சம்பந்தர் கோயில்" என்றார். "இதுவரையில் காட்டவில்லையே! வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லையே! எங்கே சாவி?" என்றார் கந்தசாமித் தம்பிரான்.

கட்டளைச் சேவகர் ஓடிப்போய் சாவி வாங்கிவர, திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் கதவு திறக்கப்பட்டது. திருக்கோயில் இருந்த நிலை வருந்தத்தக்கது.

சைவசித்தாந்தத்தில் ஆன்மாக்களுக்குப் 'பசு' என்று பெயர். இந்தப் 'பசு'க்களைக் காத்தருள திருஅவதாரம் செய்த திருஞானசம்பந்தர், நான்கு கால் பசுக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பால் குடிக்கும் ஆர்வம் திருஞானசம்பந்தருக்குப் போகவில்லையோ என்று கேட்காதீர்கள்! திருஞானசம்பந்தர் குடித்தது மீண்டும் பசி வராத ஞானப்பால்!