பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புலவர் மு. கணபதி உழவாரப் பணியில் ஆர்வத்துடன் மடிதற்றுக்கொண்டு செய்தார். அதோடு திருமுறை விழாவுக்கு விளம்பரத் தட்டிகள் எழுதி உதவினார். மேலும், வெளியூர்களிலிருந்து வரும் எல்லா அறிஞர்களையும் வரவேற்று உபசரித்தார். இப்படிப் பல நாட்கள் சீகாழியில் தங்கிப் பணி செய்தார். பணி முடிந்து ஊருக்குச் செல்லும் போது செலவுக்குப் பணம் கொடுக்கப்பெற்றது. செலவுக்கு உரிய தொகையை மட்டும் பெற்றுக்கொண்டார். வற்புறுத்தியும் கூடுதலாக ஒரு காசுகூட வாங்கவில்லை.

புலவர் தா. குருசாமிக்கு இப்போதுபோல் அப்போதும் துரும்பு உடம்புதான். கடின உழைப்பு அவரால் இயலாது. ஆனாலும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்தார். உணவு முதலியன வழங்கும் பணியை வை. சு. தண்டபாணி கவனித்தார். திருஞானசம்பந்தர் திருக்கோயில் திருப்பணியில் கந்தசாமித் தம்பிரானுக்கு உடனிருந்து உதவியவர்கள் பலர். சீகாழி என்றால் முதலியார் குடும்பம் நினைவுக்கு வரும். தொண்டை மண்டல முதலியார் குடும்பம், பெரிய குடும்பம்; சைவத்தில் மிக்கப் பற்றுள்ள குடும்பம். சீகாழித் திருக்கோயிலுடனும் தருமபுர ஆதீனத்துடனும் நெருக்கமான தொடர்புள்ள குடும்பம். இக்குடும்பத்தில் இந்தத் திருப்பணிக்கு உடனிருந்து உதவியவர்களில் வக்கீல் சீனவாச முதலியார், பெரியவர் சுப்பராய முதலியார், கிருஷ்ணமூர்த்தி முதலியார், சதாசிவ முதலியார், ராமநாத முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்! இளைஞர்கள், மாணவர்கள் பத்துப்பேர், மெய்க்காட்டு ஆட்கள் ஐந்து பேர் பணி செய்தனர். இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பாலும் திருஞானசம்பந்தர் திருக்கோயில் உழவாரப் பணி நடந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் கந்தசாமித் தம்பிரானுக்கு உழவாரத் தொண்டு அறிமுகமாகியது. இன்றுவரை இந்த உழவாரத்தொண்டில் ஆர்வம் குறையவில்லை. இன்றும்