பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தீண்டாமை விலக்குக் கொள்கை இன்றளவும் நமது வாழ்க்கையின் குறிக்கோளாக விளங்குகின்றது என்கிறாரே “குன்றை அடிகளார்” (55. 73).

சொல்லின் செல்வராகத் திகழ்ந்த சேதுப்பிள்ளை தகுதி வாய்ந்த குடும்பங்களுக்குத் தாமாக உதவும் கொடையாளராகவும் திகழ்ந்தார் என்பதைச் சுட்டும் அடிகள் வரலாறு, உருக வைக்கின்றது. தமிழ்ப் புலமையர் பண்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது காட்டும் பட்டயமும் ஆகின்றது (71. 145).

'அடிகளார் நினைவலை’கள் சார்ந்தவை இவை. ‘மண்ணும் மனிதர்களும்’ என்னும் மூன்றாம் பகுதி விரிவு மிக்கது (63-231). இன்னும் விரிவாக வந்திருப்பினும் பேறேயாம் என்று வேட்கை கொள்ள வைப்பது, அடிகளார் தம் வரலாற்றைத் தாமே எழுதி வைத்த ஆவணம் அன்னது.

கருவறையில் செத்து நாறிக் கிடந்த நாயை அகற்றவும், கோயிலைக் கழுவித் தூய்மைப்படுத்தவும் திருப்பணி செய்யவும் தொண்டர்கள் வரிந்துகட்டி நின்று கடனாற்றினர். அப்பணி முடிந்ததும், பூசகர் புகுந்து உரிமை கொண்டாடினார் என்பது தொடரும் வரலாறு தானே (77).

திருமடங்களைப் பற்றிப் பல குறிப்புகளை வழங்குகிறார் அடிகளார் :

"துறவிகளிடத்தில் கூட இணக்கம் - ஒற்றுமை - காண்பதரிது“

“ஒருதுறவிபோனவழியில் இன்னொரு துறவிபோகமாட்டார்” (106)

"திருமடங்களுக்குள்ளேயும் துறவிகளுக்கிடையேயும் வளத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் எண்ணப்படு கின்றன” (131) - இவை ஆழ்ந்த கவலையில் வெளிப்பட்டவை.

“தமிழ்நாட்டு மடாதிபதிகளில் கப்பல் வழியாகவும் விமானம் வழியாகவும் உலக நாடுகளைச் சுற்றி வந்த மடாதிபதி - ஆதீனகர்த்தர் நாம் ஒருவர் தான்!” - (199)

“தமிழ்நாட்டு மடங்கள் வரலாற்றில் இது (தாம் மேலவை உறுப்பினராயது) ஒரு திருப்பு மையம்” (206)

- இவை காவிக்குள் இருந்த கவின்புரட்சி.

நம்பும் மதம் (ஆத்திகம்) நம்பாமதத்தொடு (நாத்திகத் தொடு) இணைந்த வரலாறு உண்டா? இல்லை! நம்பாமதந்தான் நம்பும் மதத்தை மதித்துக் கூடியது உண்டா? அதுவும் இல்லை. ஆனால், இரண்டும் (அடிகளாரும் பெரியாரும்) இணைந்த பேறு. கூடு துறை போலும் பாடு துறையல்லவா!

பெரியார், “எனக்கும் கடவுளுக்கும் என்ன விரோதம்? நான் பார்த்தது கூட இல்லை. எனக்குத் தேவை மனிதன் மீதுள்ள இழிவு அகற்றப்பட வேண்டும் என்பதே”