பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

153


நிர்வாகத்தை நன்றாக நடத்தினார். வட்டிக்கடை முதலாளியிடம் ஈன ஒத்தியாக இருந்த சொத்துக்களை மீட்க வழக்குத் தொடுத்தார். வாகீசம் பிள்ளை என்ற பெயரில் இவர் நிர்வாகியாக இருந்த போது வைத்த ஒத்தி! அதனால், வட்டிக் கடைக்காரர் பிரமாணம் கேட்க மகாசந்நிதானத்தை நீதி மன்றத்துக்கு அழைத்தார், மடாதிபதி நீதிமன்றத்துக்கு வர மாட்டார் என்று கருதி! ஆனால், மடத்தின் நலம் கருதி நீதிமன்றத்துக்கும் போக பொன்னம்பலத் தேசிகர் ஒப்புக் கொண்டார். அப்போதுதான் மடாதிபதியின் பயண வசதி கருதி, முதன்முதலாக மடத்துக்கு ஒரு கார் வாங்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு மடாதிபதி வரப் போகிறார் என்பதை அறிந்தவுடன் வட்டிக்கடை முதலாளி சமாதானத்துக்கு முயன்றார். சமாதானம் கைகூடியது. 'பாதி சொத்துக்களை உடனடியாக ஆதீனம் வசம் ஒப்படைக்க வேண்டும். மீதியை இருபத்தைந்து ஆண்டுகளில் ஆதீனத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்று முடிவானது. இந்தச் சொத்துக்களை நாம் வந்துதான் மீட்டோம்.

பொன்னம்பலத் தேசிகருக்குப் பின் ஆறுமுகத் தேசிகர் பட்டத்துக்கு வந்தார். இவர் காலத்தில், இருந்த சொத்துக்கள் ஒழுங்காகவும் சிறப்பாகவும் பராமரிக்கப் பெற்றன. படு சிக்கனம்! இவர்கள்தான் நம்முடைய ஞானாசிரியர்; குரு மூர்த்தி.

17

நாம் சின்னப்பட்டம் ஆனதும் திருமடத்தின் மாடியில் இருப்பு. யாதொரு பணியும் இல்லை. ஆதலால், நிறையப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. குன்றக்குடி துச. துரைசாமி குருக்கள் சாத்திர்ம், ஆகமங்களில் போதிய பயிற்சியுடையவர். இவரிடம் நாம் வடமொழி படித்துக்கொண்டோம்.

திருக்குறள் வகுப்புத் தொடங்கினோம். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் மடத்தில்